Monday, February 1, 2010

பரதேசியின் கதை..

(படத்தில் இருக்கும் பலா சங்கர் வெறும் மாடலே. அவருக்கும் தலைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை)

தமிழ் நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றியுள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர் பட்டினத்தார். சென்னையில் இருப்பவர்களுக்கே நிறைய பேருக்கு இவரின் சமாதி சென்னையில் திருவெற்றியூரில் அமைந்திருப்பது தெரியாது. கடலை ஓட்டி அமைந்துள்ள சாலையில் கடலை பார்த்தபடி இருக்கிறார் பட்டினத்தார். இவரின் இயற்பெயர் திருவென்காடார்.

செல்வ செழிப்புமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர். மனைவி பெயர் சிவகலை. இருவருக்கும் குழந்தை இல்லாமல் இறைவனை வேண்ட, சிவ பக்தர் ஒருவர் கோயிலில் கண்டு எடுத்ததாக கூறி ஒரு குழந்தையை இவர்களிடம் ஒப்படைக்கிறார். ஆசையோடு வளர்த்த குழந்தை இளைஞன் ஆகி கடல் கடந்து பொருள் ஈட்ட செல்கிறான். அவன் வரும்பொழுது வெறும் எரு வரட்டி மூடை மூடையாக கொண்டு வருகிறான். திருவென்காடார் அவனை திட்டி அனுப்பி விடுகிறார். வீட்டிற்கு வந்தால் பையன் அவன் அம்மாவிடம் கொடுத்த ஒரு சிறு பெட்டி இருக்கிறது. உள்ளே ஒரு உடைந்த ஊசியும், பிறப்பிலிருந்து ஓலையும் இருக்கிறது. ஓலையில் " காதற்ற ஊசியும் வாராது கான் கடைவழிக்கே" என்று எழுதப்பட்டுள்ளது.

இயற்கையின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியாத இடம் இதுதான். செல்வ சிறப்புமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர் கண்டிப்பாக இதைவிட பெரும் தத்துவங்களை படித்திருப்பார். ஆனால் அவருடைய "ப்ரேகிங் பாயிண்ட் " இருந்தது அந்த ஒத்தை வரியில்.எல்லா சுகங்களையும் குடுத்து பின் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டால் ஒரு அதிர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் தகுதி இருந்தும் வழிக்கு வராத சிஷ்யனை ஒரு குரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தே தேடலுக்கு வழி வகுப்பார். இங்கே இறைவன் அந்த வேலையை செய்தார் . கடைசி அடியாக அந்த ஒத்தை வரி.ஞானம் பிறந்தது. துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பரதேசி ஆகிவிடுகிறார். தேடல் ஆரம்பித்தது.

பரதேசியான தம்பியை கண்டு அவமானம் அடைந்த சகோதரி அப்பதில் விஷம் கலந்து குடுகிறாள். . "தன் வினை தன்னைச்சுடும், வீட்டப்பம் ஓட்டை சுடும்" என்று கூறி அப்பத்தை கூரையில் எறிய, அந்த வீடு தீப்பிடித்து
எரிகிறது.

தகுதி உள்ள சீடன், தன் குருவை எப்படியேனும் அடைந்தே தீருவான். உங்களுக்கான நேரம் வரும் பொழுது உங்கள் குரு உங்கள் முன் தோன்றுவார், எவ்வடிவதிலும். இயற்கை இடும் இந்த புதிரையும் புரிந்து கொள்வது கடினம். நுட்பமானது. அரசியின் நகையை திருடியதாக கைது செய்யப்பட்டு அரசன் முன் நிறுத்தப்படுகிறார் பட்டினத்தார். அவரை கழு மரத்தில் ஏற்ற சொல்கிறான் அரசன். மரம் தீபிடித்து எரிகிறது. அரசன் தன் குருவை கண்டுகொண்டான். குரு சீடன் சந்திப்புக்கு அங்கே அரசியின் நகை களவு ஒரு மீடியம், அவ்வளவுதான். பின்பு அந்த அரசன் பத்ரகிரியார் ஆகி, தன் குருவையே மிஞ்சும் சீடன் ஆகிறான்.
(இவரின் கதையை தனி பதிவாக இடலாம்).

குருவுக்கு முன்பே சீடன் முக்தி அடைந்துவிட, பட்டினத்தார் ஊர் ஊராக சுற்றுகிறார் . இடையில் அவரின் அன்னை மரண படுக்கையில் இருக்கும் சேதி கேட்டு அவரை காண வருகிறார். இந்நாட்டில் அன்னைக்கு இருக்கும் மரியாதை போல் வேறு எங்கும் இல்லை. முற்றும் துறந்த முனிவரான ஆதி சங்கரர் ஆனாலும் பரதேசியான பட்டினத்தார் ஆனாலும் அல்லது சம கால ஞானியான ரமண மகரிஷி ஆனாலும் தன் அன்னைக்கே முதலிடம் அளித்து உள்ளார்கள்.
இப்பொழுது இங்கேதான் முதியோர் இல்லமும் அதிகரிக்கிறது.

மரணித்துவிட்ட அன்னையை கண்டு அழுது புலம்பி பட்டினத்தார் இயற்றிய பாடல்கள் தமிழும், கடைசி அன்னையும் மக்களும் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும்.


ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்


முக்திக்காக ஏங்கி திரியும் பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனிக்கும் இடத்தில முக்தி கிடைக்கும் என்று இறை சக்தியால் உணர்த்தப்படுகிறது. கரும்பில் பேய் கரும்பு என்ற வகை இனிப்பட்றது . திருவற்றியூர் வந்த இடத்தில பேய் கரும்பு இனிக்கிறது.

இந்த இடத்தில தான் தன் உடம்பை விட வேண்டும் என்று அவருக்கு புரிகிறது.
ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி என்றழைகப்படும். கபீர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன. ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணமலையில் மறைந்தது. போலவே பிரம்பு கூடைக்குள் புகுந்து கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டிய பட்டினத்தார் அந்த கூடை குள்ளிருந்தே மறைந்து போனார். அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் இருந்த இடத்தில ஒரு சிவ லிங்கம் இருந்தது. அதுவே திருவெற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் கோயில்.


பின் குறிப்பு: - அய்நூறு ஆண்டு கால பழமை வாய்ந்தது. சென்னையில் இருப்பவர்கள் ஒரு முறை சென்று வாருங்கள். யோகா சாதனையில் ஈடு பட்டிருப்பவர்கள் சென்று தியானம் செய்ய உற்ற இடம். அங்கே உள்ள நல்ல அதிர்வுகள் உங்களை இலகுவாக உங்களுடன் ஒன்ற செய்யும்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை பட்டினத்தார் பாடல் கீழே.

******************************************************************************************17 comments:

ஜாக்கி சேகர் said...

பாலகுமாரன் பதிவு எழுதியது போலவே இருக்கு...

எறும்பு said...

//பாலகுமாரன் பதிவு எழுதியது போலவே இருக்கு//

இருக்கும், கொஞ்ச நாள் அவரு கதையையும் படிச்சுட்டு இருந்தேன்ல அந்த பாதிப்பு கூட இருக்கலாம்.

சங்கர் said...

இனிமே ஷங்கர் முன்னாடி நீங்க காமெராவை வெளியில எடுத்துப் பாருங்க, என்ன நடக்குதுன்னு :))

சங்கர் said...

ஒரு போன் பண்ணியிருந்தா நானும் வந்திருப்பேனே

ஷங்கர்.. said...

இப்ப சந்தோசமா RG,,??

//இப்பொழுது இங்கேதான் முதியோர் இல்லமும் அதிகரிக்கிறது//

அப்படியே அனாதை ஆஸ்ரமங்களும், குழந்தை இல்லாதவற்களுக்காய் நவீன சிகிச்சை முறைகளும் ..:(

மனது கனத்த பாடல்..
நல்ல இடுகை எறும்பாரே..

-----
@சங்கர்..
மொத்தம் எனக்கு ஸிக்ஸ் பேஸ் இருக்குங்க.. இது ஓண்ணுதான் பார்த்திருக்கீங்க, அதுவும் வரும்..:))
(அப்பாடி என் போட்டோவுக்கு ஜஸ்டிபிகேஷன் பண்ணிட்டேன்.)

எம்.எம்.அப்துல்லா said...

//கொஞ்ச நாள் அவரு கதையையும் //

ஆமாம்.அவர் விடுவதெல்லாம் கதைதான்.உண்மையல்ல.

:)

ஸ்வாமி ஓம்கார் said...

என்னை கேட்காம என் சரிதையா என ஆவலாக வந்தேன்... :)

வல்லிசிம்ஹன் said...

பட்டினத்தார் பாடலை இட்டதற்கு நன்றி.
எங்கள் அன்னையைத் தீயில் இட்டபோது நான் இப்படி உருகவில்லை.
வெறித்தவண்ணம் பார்த்திருந்தேன்.


நேரம் எனக்கு வாய்க்கட்டும். பட்டினத்தாரைப் போய்ப் பார்க்க.

Vidhoosh said...

டிஸ்கி சூப்பர். :))

பதிவு ரொம்ப அருமை.

Vidhoosh said...

பலா ஷங்கர் போட்டோ மார்கெடிங் செய்ய வேண்டிய சன்மானம் கொடுத்தாரா.. :))

mayilravanan said...

நல்ல உருக்கமானப் பதிவு..அவசியம் ஒரு தடவைப் போயி பாத்துர
வேண்டியதுதான்..

Chitra said...

பட்டினத்தார் பாடல் - அதை விளக்கி, தங்கள் பாணியில் இந்த இடுகை - எல்லாம் அருமை.

எறும்பு said...

வருகை தந்த அனைவர்க்கும் நன்றி.

@ சங்கர் கண்டிப்பா அடுத்த தடவை போகும் பொழுது சொல்றேன்

துபாய் ராஜா said...

நல்ல இடுகை.'பத்ரகிரியார்' பதிவையும் எதிர்பார்க்கிறோம்.

துபாய் ராஜா said...

நல்ல இடுகை.விரைவில் 'பத்ரகிரியார்' பதிவையும் எதிர்பார்க்கிறோம்.

goma said...

அன்னையைப் போற்றும் நாட்டில்தான் முதியோர் இல்லம் பெருகி வருகிறது.

நெத்தியடி

Anonymous said...

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454