Monday, December 28, 2009

அன்பு நெஞ்சங்களுக்கு..

(படம் உதவி: ஏதோ ஒரு இணையதளம்)


அன்பு
நெஞ்சங்களுக்கு, நீங்க படிச்சுட்டு இருக்குற இந்த ப்ளாக் இந்த வருஷம் ஆரம்பிச்சதுதான். வலைப்பூக்களோடு கடந்த மூன்று வருசமா தொடர்பிலிருந்தாலும் ப்ளாக் ஆரம்பிக்க ரெம்பவே யோசிச்சேன். ஒருவழியா அக்டோபரில் ஆரம்பிச்சு ஏதோ போய்ட்டு இருக்கு. இதனால நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க .மற்றபடி இந்த வருஷம் ரிஷசெனால ஆபிசுல கொஞ்சம் பிரச்னை. உருவிடுவாங்கன்னு பயத்துல பாண்ட இறுக்கி பிடிசுட்டுதான் இருந்தேன். வேலையை தவிர, போனசு இன்க்ரிமெண்டு எல்லாத்தையும் உருவிடாங்க.
புது
வருசத்திலயாவது உருவுனதை திருப்பி தருவாங்களான்னு தெரியலை. இல்லேன்னா இந்த வருஷம் வேற அண்ணாச்சி கடை பாக்க வேண்டியதுதான். (இப்படி கடை கடையா போறதே பொழப்பா போச்சு).

ஆபிசு
வேலைல பிரமோசன் இல்லைனாலும், தனிப்பட்ட வாழ்க்கைல பிரமோசன் வைடிங். என் வீட்டு ரேசன் கார்டில், என் பெயர் ,மனைவி பெயருக்கு அடுத்து புதிதாக ஒரு பெயர் இணைக்கப்பட உள்ளது. டாக்டர்கள் கூறிய பிப்ரவரி முதல் வாரத்திற்கு குடும்பமே ஆவலாய் காத்திருகிறது.

இழந்தது, நேற்று தீடீர் என்று ஹிட் கவுன்ட்டர் வேலை செய்யவில்லை. போஸ்ட் ரீடிங் அதிகமாய் காண்பிக்க, ஹிட் கவுன்ட்டர் வந்தவர்களின் எண்ணிக்கை ரெண்டிலேயே திகைத்து நின்று விட்டிருந்தது. ஏதோ அஞ்சு லட்சம் ஹிட்ஸ் வாங்கின பிரபல பதிவர்னா சரி, நம்ம வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் தப்பா காட்னா எப்படி கல்லா கட்றது? இன்னிக்கு ஆபிசு சிஸ்டத்தை ஆன்லையே வச்சு, என் ப்ளாக்கை ஓபன் பண்ணி, F5 கீ மேலே எதை ஆவது வச்சிட்டு வீட்டுக்கு போலாம்னு ஒரு எண்ணத்துல இருக்கேன்.புது வருடம் மொக்கைகளை குறைத்து கொண்டு கொஞ்சம் உருப்படியாய் எழுதவும் முயற்சிக்கிறேன்.

மற்றபடி
பிறக்கப் போகும் புது வருடத்தில் துணிவும், மன உறுதியும் உங்களை வழி நடத்திச்செல்ல உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அற்புதங்கள் நிறைந்ததாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்.

மன்னிக்கவும், நீங்கள் தமிழர் இல்லையா... எனவே....."WISH YOU A HAPPY NEW YEAR"
*************************************************************************************

Tuesday, December 22, 2009

அம்பாசமுத்திரம் - விசூவல் ட்ரீட்


1945 ல், திருநெல்வேலி கலக்டராக இருந்த திவான் பகதூர் விஸ்வநாத ராவால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1947 ல், கலக்டராக இருந்த சேஷாத்ரியால் திறந்து வைக்கப்பட ஆர்ச். திருவாடுதுறை ஆதினத்தால் வழங்கப்பட்ட அன்பளிப்பு இது.


அம்பாசமுத்திரம் சர்வோதய சங்கம்.


அம்பை பெரிய கோயில் செல்லும் சாலை. முதல்வன், கருத்தம்மா, போன்ற படங்களில் பார்த்து இருப்பீர்கள். இருபக்கமும் மருத மரங்கள் நிற்கும் அழகான சாலை. கொஞ்ச வருஷம் முன்னாடி, இது ஆள் அரவமற்ற சாலை. இப்போ நிறைய வீடு வந்தாச்சு. கீழயும் பாருங்க.

நாங்கதான் வயல் வேலை செஞ்சு கஷ்டப்படறோம்.நீங்களாவது படிச்சு நல்ல வேலைக்கு போங்கப்பா என்று விவசாயம் பார்த்த அப்பாவும், தாத்தாவும் கூறியதின் விளைவு.. வயல் வெளிகள் மரகதாம்பிகை நகர் ஆகிவிட்டது. அங்கு குடியிருப்போர் நல சங்கம் உள்ளது. ஆனால், எதிர் காலத்தில் உண்ண அரிசி இருக்குமா??
வயல் வெளியை நிரப்பி தனியார் பள்ளிக்கூடம். நிறைய எஞ்சினீயரும், டாக்டரும் கிடைப்பாங்க. விவசாயி???

மேலப்பாளையம் ரத வீதி..... தேரோடிய வீதி...

ஒத்தை கிளியாஞ்சட்டியில் நான் குறிப்பிட்ட சிவன் கோயில்..

கோயிலின் உட் பிரஹாரம்.

சம்ஹாரம் முடிந்து தலை கொய்யபட்ட சூரனும், அடுத்த திருவிழாவுக்கு காத்திருக்கும் கடவுளின் வாகனங்களும்.கோயிலுக்கு அருகிலிருக்கும் ஒத்தை மாமரம். ஒவ்வொரு வருடமும் குத்தகைக்கு விடப்படும். ஆனால் குத்தைக்காரர், ஒரு வருடம் கூட அதன் முழு பயனை அனுபவித்தது இல்லை. மாங்காய்கள் பழுக்கும் முன்பே சூறை ஆடப்படும். உபயம் : மேலப்பாளையம் தெரு சிறுவர்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பயபுள்ளைங்க, குத்த வைத்து ஊர் வம்பு பேச ஒரு இடம் உண்டு. இந்த இடம் ஆத்துக்கு செல்லும் வழியில் உள்ள வாய்கால் பாலம். இந்த பாலத்திற்கு அனேகமாக, ரத வீதியில் உள்ள அனைவரின் கதையும் தெரிந்திருக்கும்.


ஆற்றுக்கு செல்லும் பாதை. அருகில் உள்ள ஓடையில், தண்ணீர் பாம்பு வேட்டை நடத்தப்படும். பிடிபட்ட பாம்புகளுக்கு, மூக்குபொடி போட்டுவிட்டா நல்லா ஆடும். பிறகு எல்லா பாம்பையும் கயிற்றில் கட்டி, மேல எலெக்ட்ரிக் ஒயரில் வீசப்படும்.
தூரத்தில் தெரிவது, அம்பை கல்லிடைக்கு நடுவில் இருக்கும் பெரிய கோயில்.

வயல்களுக்கு நடுவில் புருசோத்த பெருமாள் கோயில்.

தாமிரபரணி ஆற்றங்கரை...


ஆற்று தண்ணீர் அளவை கூறும் சிவன் பாறை. இது மூழ்கும் அளவை கொண்டு தண்ணீர் அளவு கணிக்கப்படும்.
நூறாண்டு வயதுள்ள ரயில் பாலம். இப்பொழுது அகல ரயில் பாதை வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதையும் தாக்கு பிடிக்கும் இந்த பாலம்.

பிரமாண்டமான அரச மரமும், பிள்ளையாரும்..

சாயங்கால வேலை...


ஆற்றுக்கு செல்லும் வழியில் பூத்திருக்கும் கோழி கொண்டை செடிகள்.

Thursday, December 17, 2009

எச்சரிக்கை அறிவிப்பு - மீறினால் நீங்களே பொறுப்பு

வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு மழைக்கும் இந்த மாதிரி செய்தி படிப்பீங்க. அட, அத நம்ம பெரிசா எடுத்துக்கவும் மாட்டோம். ஆனா மழை விசயத்தை லேசா எடுத்த மாதிரி, கீழே உள்ள அறிவிப்பை எடுத்துக்காதிங்க... அது ரெம்ப சீரியஸ்..

நாளை 18-12-09, யாரும் சத்யம், உதயம், அபிராமி, சங்கம், மாயாஜால் போன்ற தியேட்டர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். நாளை படம் பார்த்து வெளியே வருபவர்கள், வெறித்த பார்வையுடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல தோற்றம் அளிக்க கூடும். அதை பார்க்கும் குழந்தைகள் பயப்பட கூடும்.

மற்றபடி இந்த எச்சரிக்கையை நீங்கள், நாளை ரிலீஸ் ஆகும் படத்துடன் சம்பந்த படுத்தி யோசித்தால் அதற்கும் நீங்களே பொறுப்பு.

Wednesday, December 16, 2009

3D பைனாரல் - அசர வைக்கும் ஆடியோ

நீங்கள் ஒரு கடற்கரையில் கண் மூடி அமர்ந்து இருக்கறீர்கள். உங்களை சுற்றி கேட்கும் சத்தத்தை கவனியுங்கள். மெல்லிய காற்றின் சத்தம், மணலில் விளையாடும் சிறு குழந்தைகளின் சத்தம், அருகில் அமர்ந்திருக்கும் காதலர்களின் செல்ல சிணுங்கல் சத்தம், சுண்டல் விக்கும் வியாபாரிகளின் சத்தம். இவை அனைத்தும் உங்களை சுற்றி நடக்கிறது. உங்கள் கண்களுக்கு நேரில் தெரிவதை மட்டும் கிரகிக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் உங்கள் செவிகள் உங்களை சுற்றி நடக்கும் எந்த விசயத்தில் இருந்தும் சத்தத்தை கிரகித்து கொள்கிறது.

இந்த அனுபவத்தை அப்படியே உங்களுக்கு தருவதுதான் 3D பைனாரல் (binaural) ஆடியோ தொழில்நுட்பம்.சாதரணமாக "ஸ்டீரியோ" ரெக்கார்டிங்கில் இருந்து மாறுபட்டது இது. சாம்பிளுக்கு ஒரு ஆடியோ லிங்க் கீழே.

ஒரு வித்யாசமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

ரெம்ப ரெம்ப ரெம்ப முக்கியமான விஷயம், இதை நீங்கள் ஸ்பீக்கரில் கேக்க கூடாது. உங்கள் ஹெட் போனை பயன் படுத்துங்கள்.(ஸ்பீக்கர் கேட்டுட்டு ஒரு வித்யாசமும் தெரியலியேனு கமெண்ட் போட்டா, முன் உரிமை கொடுத்து டெலிட் செய்யப்படும்) கண்களை மூடி கொண்டு கேட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.என்ன சூப்பரா இருந்ததா? உண்மைய சொல்ல போனா இந்த தொழில்நுட்பத்தை பற்றி முழுமையா படிச்சு, அத உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னு எனக்கும் ஆசைதான். ஆனா பாருங்க, துறை சார்ந்த பதிவுகள் போடும் பொழுது, மொக்கை போடுவதற்கோ, கும்மி அடிப்பதற்கோ வாய்ப்புகள் கம்மி.எனவே பெரியோர்களே, ஆர்வம் மேலிட இத பத்தி நான் ஆராயஞ்சே ஆகணும்னு நினைகிறவங்க இங்க போங்க..

http://en.wikipedia.org/wiki/Binaural_ரெகார்டிங்

அனுபவிச்சா மட்டும் போதும்னு நினைகிறவங்களுக்கு மேலும் கீழே ஒரு லிங்க்.
மறுபடியும் கண்களை மூடி ஹெட் போன் மூலம் கேட்கவும்.

Virtual hair cut:-இதெல்லாம் என்ன பெரிய விசயம், என் காதலி முதல் முறையா " ஐ லவ் யு" சொன்னது இன்னும் என் தலைக்குள்ள சுத்தி சுத்தி சுத்தி கேக்குதுன்னு சொல்ற புண்ணியவான்க மேலும் feel பண்ண இத கேளுங்க.

http://www.youtube.com/watch?v=HMUTJCatIAE

Wednesday, December 9, 2009

நர்சிமின் புத்தக வெளியீடுபையனுடைய " டி" ஷர்ட போட்டுட்டு வந்த " யூத் " கவிஞர் கேபிளார்.
விழா
ஆரம்பிக்கும்
முன்
நீண்ட
நேரம்
ஞானியுடன்
பேசி கொண்டிருந்தார். (எண்டர் கீ effect)

அண்ணன் தண்டோரா ஆற்றிய வரவேற்பு உரை. சபரி மலைக்கு மாலை போட்டுருந்தார். அவர் தெளிவாவே இருந்தார். என் கேமரா தான் சரக்கடிச்ச மாதிரி இருக்கு.
நர்சிமின் புத்தகம். வெளியிடுவது ஞானி & பாஸ்கர் சக்தி.
அடக்க ஒடுக்க அண்ணன் அப்துல்லா.
அன்புடன் மணிகண்டன் நர்சிம்கு வழங்கிய அழகிய ஓலைச்சுவடி வடிவ வாழ்த்து மடல்.
வாசுதேவன், சாரு, ஞானி.
அதிரடியான சாருவின் உரை.
தலை சாருவின் பேச்சை கேட்டு தொண்டர் லக்கியின் தெய்வீக சிரிப்பு.
சாருவிற்கு நினவு பரிசு வழங்கிய D.R. அசோக்
விழா சிறப்பாக இனிதே முடிந்தது. என்னப்பா என்கிட்ட போய், என்று அழகாக சலித்து கொண்டாலும் அய்யனார் கம்மாவில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்
அன்பின்
நர்சிம்.
11-12-2009.
---------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்,,,,,,,,
---------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு:- மேலே மேட்டர் ரெம்ப formalaa இருப்பதால் கீழே கொஞ்சம் கும்மி. நீயே சின்னபையன், நீ உன்னைவிட வயசுல பெரிய நர்சிமை வாழ்த்தலாமா என்று கேட்பவர்களுக்கு. வேற வழியே இல்லை இத நீங்க கேட்டுதான் ஆகணும்.கோகுலத்தில் சீதை படத்துல ஹீரோ கார்த்திகிகும் அவங்க அப்பாவுக்கும் ஒரு சண்டை வரும். அப்பா திட்டிட்டு போன பிறகு, கார்த்திக் வேலைகாரனிடம் பொருமுவார். இவர்வேணா எனக்கு அப்பாவா இருக்கலாம், ஆனா இவர் அப்பாவுக்கு அப்பாவா ஏன் நான் இருந்துருக்க கூடாது என்று. இந்த லாஜிக் படி எப்பொழுதாவது நர்சிம்மை விட நான் வயதானவனாய் இருந்திருக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதால் நர்சிம், வாழ்க வளமுடன்..
விழா முடிந்தவுடன், நிறைய பதிவர்கள் அண்ணன் உண்மை தமிழனை சுற்றி நின்று கொண்டு , என்ன இன்னும் மூணு மாசத்துல உங்களுக்கு பழைய ப்ளாக் திரும்ப கிடைச்சுருமான்னு, அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்தனர்.

Monday, December 7, 2009

உயர் ரத்த அழுத்த உபன்யாசம் -- ஓடி வாரீர்

ஐயன்மீர் உயர் ரத்த அழுத்தம் என்பது, ஹலோ எங்க ஓடுறீங்க, நில்லுங்க. இப்படி ஒரு ப்ளாக முழுசா படிக்காம ஒடுனீங்கன்னா உங்களுக்கு பொறுமை இல்லைன்னு அர்த்தம்.. கவனிக்கவும் இது ஸ்ட்ரெஸ் லெவல் அதிகமானதால் வந்ததாய் இருக்கலாம். முதல்லே சேர்லே நல்லா ரிலாக்சடா உட்காருங்க. இப்ப எதுக்கடா இந்த உபன்யாசம்னு கேட்டா, அதுக்கான பதில் கீழே கடைசீல இருக்கு. உடனே கீழே ஸ்க்ரோல் பண்ணாதீங்க. அப்படி பண்ணீங்கன்னா உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லைன்னு அர்த்தம். முன்ன சொன்னத விட உங்களுக்கு ஸ்ட்ரெஸ் லெவல் அதிகமா இருக்கலாம். அமைதியா இருந்து பொறுமையா படிங்க...

எல்லாத்திலையும் நாம உயர்வா இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்லை ரத்த அழுத்தத்திலும் உயர்வா இருக்கணும்னு நினைச்சா கூடிய சீக்கிரம் சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்ப வேண்டிய நிலை வரலாம். இது எங்க போய் முடியும்னா, நமக்கு பிடிச்ச சாப்பாடு ஐய்டம் எல்லாம் நம்ம போட்டோ முன்னாடி வச்சு, சொந்தகாரங்க எல்லாம் ஒண்ணு கூடி அத ரசிச்சு சாப்பிடறதுல போய் முடியும்.

முதல்லே ரத்த அழுத்தம்னா என்னானு பார்க்கலாம். அத எப்படி அளக்கிறாங்க.
சிஸ்டாலிக் (Systolic), டயாச்டாலிக் (Diastolic).
சிஸ்டாலிக் : - இது நம்ம இதயம் சுருங்கி ரத்தத்தை பம்ப் பண்ணும் போது உள்ள பிரஷர். இதுவே மாக்சிமம் பிரஷர்.
டயாச்டாலிக் :- இது ஒரு துடிப்புக்கும் அடுத்த துடிப்பிற்கும் இடையில், இதயம் ரத்தத்தை நிரப்பி கொள்ளும் பிரஷர். இதுவே மினிமம் பிரஷர்.

நார்மல் ரத்த அழுத்தத்தின் அளவு 120/80. அதாவது சிஸ்டாலிக் 120 டயாச்டாலிக் 80

இது 140/90 ஆகும் போது உயர் ரத்த அழுத்தம் ஆகிறது. மருத்தவ பெயர் ஹைபர் டென்ஷன்.

யாருக்கு ரத்த அழுத்தம் உயர்வாய் இருக்க கூடும்..
1 .
காசை கரியாக்கி ஊதி தள்ளுபவர்களுக்கு (smokers).
2 .
குடி பழக்கம் உள்ளவர்களுக்கு.
3 .
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க உணவில் அதிகமாய் உப்பு சேர்பவர்களுக்கு.
4 .
தன் உடம்பை தானே தூக்கி நடக்க சிரமப்படுபவர்களுக்கு (over weight )
5 .
ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு (மனதில் அல்ல)
6 .
தன் உடம்பை பிக் அப் ட்ராப் மட்டுமே செய்யும் சுறுசுறுப்பு இல்லாதவருக்கு (no physical exercise)
7 .
சொந்த பந்தத்தில் ஏற்கனவே ஹைபர் டென்ஷன் இருந்தால், அவர்களுக்கு
8 .
கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்களுக்கு.
9 . 55
வயதுக்கு மேலான ஆண்களுக்கு (இப்போதுள்ள லைப் ஸ்டைலில் இது இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை)
10 . 65
வயதுக்கு மேலான பெண்களுக்கு (இப்போதுள்ள லைப் ஸ்டைலில் வயசு பொண்ணுகளுக்கும் பொருந்தும்)

11. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு.

ரத்த அழுத்தம் அதிகமாய் இருந்தால் எப்படி தெரிஞ்சுக்கலாம்..

இதன் அறிகுறியை, தெரிஞ்சுகிறது ரெம்ப கஷ்டம்ங்க. இத " silent killer " னு சொல்லுவாங்க. மூன்றில் ஒரு பங்கில் ரத்த அழுத்தம் உள்ளவர்களை எடுத்துகிட்டம்னா, அவங்களுக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லையாம். இத தெரிஞ்சுக்க மருத்துவ பரிசோதனை ஒன்றே வழி. ஆஸ்பத்திரி போனீங்கன்னா கைய சுத்தி ஒரு துணி மாதிரி உள்ளத கட்டி, புஸ்கு புஸ்குனு காத்தடிச்சு, மெர்குரி அளவு ஏர்ரத வச்சு உங்க ரத்த அழுத்தத்தை சொல்லுவாங்க. அந்த மீட்டர்க்கு பேரு Sphygmomanometer (நீங்களே தமிழ் படுத்திகுங்க). இப்ப டிஜிட்டல் மீட்டரும் வந்துடிச்சு.

ஆனால் சில சமயம், அதிகப்படியான மனக்குழப்பம் (சில பதிவர்களின் கவிதை படிக்கும்பொழுது வருகிற பெருங் குழப்பம் இதில் சேர்த்தி இல்லை), பார்வை குறைபாடு, அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், வயிற்று தொல்லை, பால்பிட்டேசன் (இதயம் தாறு மாறாக அடித்து கொள்ளுதல்), இதெல்லாம் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க கூடும்.

சரி உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னாகும்?

ரத்தம் பாய்கின்ற வேகம் தாங்காது , சிறு சிறு ரத்த நரம்புகள் பாதிக்கப்படும். குறிப்பாக கிட்னீயில் இருக்கும் சிறு ரத்த நரம்புகள் பாதிக்கப்பட்டு கிட்னி சைலண்டாக சங்கு ஊதிவிடும். அல்லது இது இதயத்தின் வேலையை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக இதயத்தை சுற்றி உள்ள தசைகள் விரிவடைந்து இதயத்தை பெரிதாக்குகிறது. பெரிதான இதயம், உடம்பிற்கு தேவையான ரத்தத்தை சப்ளை செய்ய முடியாமல் உயிரை விடுகிறது. சமயத்தில் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் வெடித்து ஸ்ட்ரோக் வரலாம்.

சரி வராம இருக்க என்ன பண்ணலாம்?
தினமும் உடம்ப கொஞ்சமாவது அசைங்க. பிரிஸ்க் வாகிங் இல்ல வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி.
ஒரு நேரமாவது உணவில் முழுக்க பழ வகைகளை சேர்த்து கொள்ளுங்கள்.
கொஞ்சம் தியானம் அல்லது உங்கள் மனதை ரிலாக்ஸா வைக்க நல்ல இசை கேளுங்கள்..

நல்ல தூக்கம்

சரி குறை ரத்த அழுத்தம் பற்றி ஏதாவது?. அது அவ்வளவு அபாயம் இல்லாததால் குறை ரத்த அழுத்த கும்மி அடிக்கவில்லை.
மேல் விபரங்களை ஆங்கிலத்தில் படித்து தமிழ் படுத்தி எடுத்து இருக்கிறேன். ஏதாவது பிழை இருந்தால் படிக்கிற மருத்துவ துறையில் இருக்கின்ற நண்பர்கள் சொல்லவும்.

ஏண்டா இந்த உபன்யாசம்னு கேக்கறீங்க, அதுக்கு பதில். போன வாரம் ஒரு நாள் என் மனைவிக்கு செக்கப் போகும்போது, செக் பண்ண நர்சை (சிஸ்டர் அல்ல) பார்த்து குதூகலமாகி என் கையை செக் பண்ண நீட்டியதின் விளைவு. எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது. கம்பனி, மெடிக்கல் க்ளைம் புண்ணியத்தில் பாடி செக்கப் பண்ணியதில், ரிபோர்ட பார்த்த டாக்டர், உடம்புல எந்த பிரச்சினையும் இல்லை. மனசுல ஏதாவது பிரச்சினைனா மனைவிகிட்ட மனசு விட்டு பேசுங்க.. எல்லாம் சரி ஆயிடும் என்றார்.

அன்றைக்கு எல்லாம் நார்மலாய் இருந்தது. வீட்டிற்கு வந்தபின் மனைவி, ஏங்க என்ன பிரச்சினை உங்களுக்கு, புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு, அடுத்து என்ன போஸ்ட் பண்ணலாம்னு மோட்டு வளைய வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கீங்களே, அதனால இருக்குமோ? . விடு கழுதைய இதையே ஒரு போஸ்டா போட்ரலாம் என்றேன்.

பின் குறிப்பு:-
நெட்டில் தேடியதில் " white coat hypertension " பற்றி அறிய முடிந்தது. அதாவது வெள்ளை கோட்டை பார்த்தால் ரத்த அழுத்தம் அதிகமாவது. ஆதலால், மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்சுகளின் யூனிபார்மையும் டாக்டரின் வெள்ளை கோட்டையும் கலர் புல்லா மாற்ற அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்கிறேன்

மிக முக்கியமான பின் குறிப்பு:-

ரத்த அழுத்தம் ரத்த அழுத்தம் சொல்றீயே அப்படினா என்ன என்று கேட்கிற பய புள்ளைங்களுக்கு அதன் சரியான தமிழாக்கம் “Blood pressure” உயர் – “High”

பொதுவா மனோ வியாதி சம்பந்த புத்தகத்தை படிக்கும் பொழுது அதற்கான அறிகுறிகள் நம்ம மனைவிக்கோ, மாமியாருக்கோ இல்ல அவங்க சொந்தக்காரங்களுக்கோ இருக்குற மாதிரி தோணும்..ஆனா உடல் வியாதி பற்றி படிக்கும்பொழுது அதன் அறிகுறிகள் நமக்கு இருக்குதோன்னு தோணும். இவ்வளவு நேரம் படிச்சதுல உங்களுக்கு தலை லைட்டா கிர் ரடிக்கிற மாதிரி இருந்தா தயவு செஞ்சு போய் பிரஷர் செக் பண்ணிகிங்க.
உபன்யாசம் முடிந்தது. நன்றி.