Monday, October 25, 2010

அம்மா அப்பா மற்றும் குஞ்சு புறாக்கள்

Dove hatching eggs 
நான் வேலை பார்க்கும் ஆபீஸ் இருப்பது ஒரு கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில். கான்க்ரீட் காடான சென்னையில் தங்குவதற்கு மரங்கள் இல்லாத புறாக்கள் அவ்வப்போது எங்கள் ஆபிசில் தஞ்சம் புகும். பெரும்பாலும் ஜன்னல் ஓரத்தில் இல்லை என்றால் பால்கனியில் கூட்டமாக அமர்ந்திருக்கும். எங்கள் ஆபீஸ் பால்கனியில், ஏழு ஏசி அவுட் டோர் யூனிட் பொருத்தப்பட்டிருக்கும்.  பிரிடிஷ்காரன் கம்பெனி என்பதால், பறவை காய்ச்சலுக்கு பிறகு நிறைய பாதுகாப்பு வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் ஒன்று ஏசி அவுட் டோர் யூனிட் பக்கம் எந்த பறவையையும் அண்ட விடக்கூடாது. அது இடும் எச்சங்கள் ஏசி காற்றில் கலந்து வேலை பார்ப்பவர்களுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

ஒரு நாள் பால்கனியை திறந்து பார்க்கும் பொழுது, சட சடத்து பறந்தது ஒரு புறா. கூடொன்று கட்டும் முயற்சியில்  இருந்தது அந்த புறா. பெயருக்குத்தான் அது கூடே தவிர, அது சுள்ளிகளின் குவியல் போலிருந்தது. அன்றைய வேலையில், அதை சுத்தம் செய்ய சொல்ல மறந்து போனேன். மறு நாள் பார்கையில் அந்த சுள்ளி குவியலுக்கு மத்தியில் ஒரு முட்டை. ரெண்டு நாள் கழித்து மற்றொரு முட்டை இட்டிருந்தது. பால்கனி கதவை திறக்கும் பொழுது எல்லாம் ஒரு புறா இரு முட்டைகளின் மேல் தவம் செய்வது போல் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும். மற்றொரு புறா ஆண் புறாவாக இருக்கும், அதற்கு துணையாக, காதலாக பக்கத்தில் காத்திருக்கும்.


அந்த ஜோடி புறாக்கள் இப்பொழுது எங்கள் அலுவலகத்தின் விருந்தாளிகள். அதை கண்காணிக்க முடிவு செய்து செய்து எங்கள் அலுவலகத்தில் வேறொரு இடத்தில பொருத்தி இருந்த செக்யூரிட்டி காமிராவை பால்கனியில் பொருத்தினோம்(டெக் டீமில் இருந்தால் இது ஒரு வசதி). அது ஒரு மோசன் டிடக்ட் காமிரா, எதவாது அசைந்தால் மட்டும் வீடியோ  எடுக்கும். புறாவின் ஒவ்வொரு அசைவையும் படமெடுத்தது. அலுவலகத்தின் அன்றாட வேலையில் புறா ஜோடியை வேடிக்கை பார்ப்பதும் சேர்ந்து கொண்டது (ஆபீஸ்ல வேலை பார்த்துட்டா மட்டும்). அலவலகத்தில் பெருக்கி துடைக்கும் அம்மா காலையில் வந்தவுடன் இன்னா சார், புறா குஞ்சு பொரிச்சிருச்சா, எதுனா படம் இருந்தா போட்டு காட்டேன் என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
 அடை காக்கும் புறா எப்படி இரை தேடும், ஆண் புறா கொண்டு வந்து கொடுக்குமா என்ற கேள்விக்கு வீடியோ விடை அளித்தது. புறா ஆணாதிக்கவாதி அல்ல. இரவு முழுதும் அடைக்காக்கும் பெண் புறா காலையில் ஆண் புறாவிடம் அந்த வேலையை கொடுத்துவிட்டு இரை தேட சென்று விடுகிறது. மாலை வரை ஆண்  புறா அடைகாக்கிறது. குஞ்சு பொரிக்க பதினஞ்சிலிரிந்து பதினெட்டு நாட்கள் ஆகிறது. குஞ்சு பொரித்தவுடன் மறுபடியும் தாயும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி குஞ்சுகளை காக்கின்றன. குஞ்சுகள்  பெற்றோரின் சிறகின் கதகதப்பில் உறங்கும் அழகு அற்புதம்.  இன்னும் ஒரு மாதம் இருக்கிறது அந்த குஞ்சுகள் தன் சிறகை விரித்து பறக்க.


 

மேலும் தகவல்கள்:-
# பெரும்பாலும் நகரங்களில் காணப்படுவது பாறை புறா (Rock dove)
# ஆண் புறாக்கள் கூட்டை கட்டி விட்டு, பெண் புறாவை அழைக்கும்
# பெண் புறா இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் இடும்.
# இரண்டு புறாக்களும் மாற்றி மாற்றி அடை காக்கின்றன
# குஞ்சு பொரிக்க 15 இல் இருந்து 18 நாட்கள் ஆகின்றன
# பிறக்கும் போது குஞ்சுகள் மஞ்சள் நிறத்தில் சிறகுகள் இன்றி இருக்கும்.
# குஞ்சு பிறந்தவுடன் முட்டை ஓடுகளை தாய்ப்புறா அப்புறப்படுத்தி கூடை சுத்தம் செய்கிறது.
# இந்த நேரத்தில் கண் திறக்காத குஞ்சுகளை தாய் புறாவும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி அரவணைத்து நிற்கின்றன.
# குஞ்சுகள் நன்கு வளரும் வரை, அவற்றிற்கு  தன் இரைப்பையில் சுரக்கும் பாலை அளிக்கின்றன இரு புறாக்களும்.
# வளரும் குஞ்சுகள் பறப்பதற்கு நான்கில் இருந்து ஆறு வாரம் ஆகிறது.
# குஞ்சுகள் பறக்க ஆரம்பித்தவுடன், சிறிது காலம் உணவு அளிக்கும் புறாக்கள், பின்பு அதனை விட்டு விலகிவிடும்.
# இந்த வகை புறாக்கள் 5 இல் இருந்து 15 வருடம் வரை உயிர் வாழும்.
# அஞ்சு மாதம் ஆகும் குஞ்சுகள் இணையை தேட ஆரம்பித்துவிடும்.
# மறுபடியும் தொடரும் முதலில் இருந்து.

புறா அடைக்காப்பது மற்றும் ஆண் மற்றும் பெண் புறா அடைக்காக்கும் பணியை மாற்றிகொள்வது போன்றவற்றை வீடியோவில் கண்டு களியுங்கள்.
********************

Tuesday, October 12, 2010

50'வது பதிவு - ஒரு பதிவரின் வாக்குமூலம்

போன வருடம் அக்டோபர் 12 இல் எனது முதல் பதிவை ஆரம்பித்தேன். இன்றோடு ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறேன். இந்த இடுகையில் இன்னொரு சிறப்பு, இது எனது அம்பதாவது இடுகை.(போதும் போதும் எவ்வளவு நேரம் கைதட்டுவீங்க). ஒரு வருடத்திற்கு அம்பது இடுகை என்பது, எனது இலக்கியப்பயனத்தில் மிகவும் குறைவுதான் இருந்தாலும் இந்த வருடம் இலக்கிய சேவையை ஆத்து ஆத்துன்னு ஆத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

சில பதிவர்கள் அவர்களின் அம்பதாவது, நூறாவது இடுகையில் சமுதாயத்தை திருத்த அல்லது இந்த பாழாய் போன சமுதாயத்திருக்கு மெசேஜ் சொல்லி இடுகை இடுவார்கள். நான் இதற்கு  முந்தைய நாற்பத்தி ஒன்பது இடுகையிலும் உருப்படியாய் ஒன்றும் எழுதவில்லை என்ற காரணத்தினாலும், அப்படியே எனக்கு தெரியாமல் எதையாவது எழுதி இருந்தாலும்  அதை படித்து பயபுள்ளைங்க யாரும் திருந்தமாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் எனது மொக்கையை மேலும் இதிலே தொடர்கிறேன்.

நான்  இந்த பதிவுலகத்துக்கு வந்தது (இந்த உலகத்துக்கு ஏன் வந்தேன்னு இன்னும் புரியலை) நலிவுற்று கிடக்கும் இலக்கியத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம் என்கிற எண்ணத்தில்தான் என்றாலும் அப்படியே ஒத்த கருத்துள்ளவர்களை நண்பர்களாய் அடைவதும் ஒரு காரணம். இந்த வேளையிலே கடந்த ஒருவருடத்தில் நான் அடைந்த நண்பர்களை கண்டு பேரானந்தத்தில் துய்க்கிறேன்.(நல்லவேளை இன்னும் என் chat history எதுவும் வெளிவரவில்லை).போலவே இந்த ஒரு வருடத்தில் நான் வன்புணர்ச்சி, துகிலுரிதல், சொற்சித்திரம், புனைவு, நெளிஞ்ச சொம்பு, பெண்ணீயம் போன்ற நல்ல வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.  இந்த நேரத்தில் என் படைப்புக்களை படித்து விட்டு பின்தொடற்பவர்கள்(108 Followers) பின் தொடந்து விட்டு படிக்காதவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இடுகையுடன் பின்தொடற்பவர்கள் list  மற்றும் hits counter என்னுடைய தளத்தில் இருந்து நீக்கப்படுகிறது. இல்ல உங்க எழுத்துன்னா எனக்கு உசிரு மத்ததெல்லாம் மசிரு  உங்களை பின்தொடந்தே ஆவேன் இல்லையேல் சாவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் உங்கள் டேஷ்போர்டில் Blogs iam following இல் எனது URLai சேர்த்து கொள்ளவும். சரி ஹிட்ஸ் கவுன்டரை ஏன் எடுத்தீங்க என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே வந்த ஹிட்ஸ்களை வைத்து நான் மகாபலிபுரம் சாலையில் வாங்கிபோட்டிருக்கும் அம்பது ஏக்கர் நிலமே என் வாழ்க்கைக்கு போதும் என்ற காரணமே அன்றி வேறு இல்லை.


கடந்த ஒரு வருடமாக நீங்கள் தந்து வரும் பேராதரவுக்கு நன்றி. இந்த ஒரு வருடத்தில் இந்த இடுகைகளை படித்தவர் யாரவது ஒருத்தர் திருந்தி இருந்தாலும் கூட எங்கையோ தப்பு நடந்திருக்கு என்று அர்த்தம்.

ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.... மொக்கை தொடரும்

GET READY FOLKS!......


***