Monday, October 25, 2010

அம்மா அப்பா மற்றும் குஞ்சு புறாக்கள்

Dove hatching eggs 
நான் வேலை பார்க்கும் ஆபீஸ் இருப்பது ஒரு கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில். கான்க்ரீட் காடான சென்னையில் தங்குவதற்கு மரங்கள் இல்லாத புறாக்கள் அவ்வப்போது எங்கள் ஆபிசில் தஞ்சம் புகும். பெரும்பாலும் ஜன்னல் ஓரத்தில் இல்லை என்றால் பால்கனியில் கூட்டமாக அமர்ந்திருக்கும். எங்கள் ஆபீஸ் பால்கனியில், ஏழு ஏசி அவுட் டோர் யூனிட் பொருத்தப்பட்டிருக்கும்.  பிரிடிஷ்காரன் கம்பெனி என்பதால், பறவை காய்ச்சலுக்கு பிறகு நிறைய பாதுகாப்பு வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் ஒன்று ஏசி அவுட் டோர் யூனிட் பக்கம் எந்த பறவையையும் அண்ட விடக்கூடாது. அது இடும் எச்சங்கள் ஏசி காற்றில் கலந்து வேலை பார்ப்பவர்களுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

ஒரு நாள் பால்கனியை திறந்து பார்க்கும் பொழுது, சட சடத்து பறந்தது ஒரு புறா. கூடொன்று கட்டும் முயற்சியில்  இருந்தது அந்த புறா. பெயருக்குத்தான் அது கூடே தவிர, அது சுள்ளிகளின் குவியல் போலிருந்தது. அன்றைய வேலையில், அதை சுத்தம் செய்ய சொல்ல மறந்து போனேன். மறு நாள் பார்கையில் அந்த சுள்ளி குவியலுக்கு மத்தியில் ஒரு முட்டை. ரெண்டு நாள் கழித்து மற்றொரு முட்டை இட்டிருந்தது. பால்கனி கதவை திறக்கும் பொழுது எல்லாம் ஒரு புறா இரு முட்டைகளின் மேல் தவம் செய்வது போல் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும். மற்றொரு புறா ஆண் புறாவாக இருக்கும், அதற்கு துணையாக, காதலாக பக்கத்தில் காத்திருக்கும்.


அந்த ஜோடி புறாக்கள் இப்பொழுது எங்கள் அலுவலகத்தின் விருந்தாளிகள். அதை கண்காணிக்க முடிவு செய்து செய்து எங்கள் அலுவலகத்தில் வேறொரு இடத்தில பொருத்தி இருந்த செக்யூரிட்டி காமிராவை பால்கனியில் பொருத்தினோம்(டெக் டீமில் இருந்தால் இது ஒரு வசதி). அது ஒரு மோசன் டிடக்ட் காமிரா, எதவாது அசைந்தால் மட்டும் வீடியோ  எடுக்கும். புறாவின் ஒவ்வொரு அசைவையும் படமெடுத்தது. அலுவலகத்தின் அன்றாட வேலையில் புறா ஜோடியை வேடிக்கை பார்ப்பதும் சேர்ந்து கொண்டது (ஆபீஸ்ல வேலை பார்த்துட்டா மட்டும்). அலவலகத்தில் பெருக்கி துடைக்கும் அம்மா காலையில் வந்தவுடன் இன்னா சார், புறா குஞ்சு பொரிச்சிருச்சா, எதுனா படம் இருந்தா போட்டு காட்டேன் என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
 அடை காக்கும் புறா எப்படி இரை தேடும், ஆண் புறா கொண்டு வந்து கொடுக்குமா என்ற கேள்விக்கு வீடியோ விடை அளித்தது. புறா ஆணாதிக்கவாதி அல்ல. இரவு முழுதும் அடைக்காக்கும் பெண் புறா காலையில் ஆண் புறாவிடம் அந்த வேலையை கொடுத்துவிட்டு இரை தேட சென்று விடுகிறது. மாலை வரை ஆண்  புறா அடைகாக்கிறது. குஞ்சு பொரிக்க பதினஞ்சிலிரிந்து பதினெட்டு நாட்கள் ஆகிறது. குஞ்சு பொரித்தவுடன் மறுபடியும் தாயும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி குஞ்சுகளை காக்கின்றன. குஞ்சுகள்  பெற்றோரின் சிறகின் கதகதப்பில் உறங்கும் அழகு அற்புதம்.  இன்னும் ஒரு மாதம் இருக்கிறது அந்த குஞ்சுகள் தன் சிறகை விரித்து பறக்க.


 

மேலும் தகவல்கள்:-
# பெரும்பாலும் நகரங்களில் காணப்படுவது பாறை புறா (Rock dove)
# ஆண் புறாக்கள் கூட்டை கட்டி விட்டு, பெண் புறாவை அழைக்கும்
# பெண் புறா இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் இடும்.
# இரண்டு புறாக்களும் மாற்றி மாற்றி அடை காக்கின்றன
# குஞ்சு பொரிக்க 15 இல் இருந்து 18 நாட்கள் ஆகின்றன
# பிறக்கும் போது குஞ்சுகள் மஞ்சள் நிறத்தில் சிறகுகள் இன்றி இருக்கும்.
# குஞ்சு பிறந்தவுடன் முட்டை ஓடுகளை தாய்ப்புறா அப்புறப்படுத்தி கூடை சுத்தம் செய்கிறது.
# இந்த நேரத்தில் கண் திறக்காத குஞ்சுகளை தாய் புறாவும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி அரவணைத்து நிற்கின்றன.
# குஞ்சுகள் நன்கு வளரும் வரை, அவற்றிற்கு  தன் இரைப்பையில் சுரக்கும் பாலை அளிக்கின்றன இரு புறாக்களும்.
# வளரும் குஞ்சுகள் பறப்பதற்கு நான்கில் இருந்து ஆறு வாரம் ஆகிறது.
# குஞ்சுகள் பறக்க ஆரம்பித்தவுடன், சிறிது காலம் உணவு அளிக்கும் புறாக்கள், பின்பு அதனை விட்டு விலகிவிடும்.
# இந்த வகை புறாக்கள் 5 இல் இருந்து 15 வருடம் வரை உயிர் வாழும்.
# அஞ்சு மாதம் ஆகும் குஞ்சுகள் இணையை தேட ஆரம்பித்துவிடும்.
# மறுபடியும் தொடரும் முதலில் இருந்து.

புறா அடைக்காப்பது மற்றும் ஆண் மற்றும் பெண் புறா அடைக்காக்கும் பணியை மாற்றிகொள்வது போன்றவற்றை வீடியோவில் கண்டு களியுங்கள்.
********************

15 comments:

புதிய மனிதா.. said...

அருமையான பகிர்வு ..

வானம்பாடிகள் said...

அழகான காணொளி. பகிர்வுக்கு நன்றி.

philosophy prabhakaran said...

என் தந்தையார் புறா வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்... ஐம்பதுக்கும் மேற்பட்ட புறாக்களை மொட்டைமாடியில் தனி அறை ஒன்றினை கட்டிவைத்து பராமரித்து வருகிறார்.... அவர் உங்களது இந்தப் பதிவை படித்தால் மனம் மகிழ்வார்... இன்று இரவுக்குள் படிக்கச் செய்கிறேன்...

எம்.எம்.அப்துல்லா said...

மயிலுக்கு போர்வைகுடுத்த பேகன் பரம்பரை அய்யாநீர்.

அன்பரசன் said...

நல்லதொரு பதிவு..

ராமலக்ஷ்மி said...

//அலவலகத்தில் பெருக்கி துடைக்கும் அம்மா காலையில் வந்தவுடன் இன்னா சார், புறா குஞ்சு பொரிச்சிருச்சா, எதுனா படம் இருந்தா போட்டு காட்டேன் என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.//

சரிதான்:))!

நான் வசிப்பது ஆறாவது மாடியில். காலை நேரம் புறாக்களை ரசிப்பது (பல படங்களும் எடுத்துள்ளேன்) பிடித்தமான ஒன்று. சாம்பல் புறாக்களும் வெண்புறாக்களும் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன எங்கள் குடியிருப்பில். இருப்பினும் குஞ்சாகக் கண்டதில்லை. புகைப்படங்களும் வீடியோவும் விவரங்களும் நல்ல பகிர்வு. நன்றி.

சிவா said...

நல்ல பகிர்வு!

எஸ்.கே said...

அற்புதமான பதிவு! நன்றி!

மரா said...

ஸ்வாமி, சொன்னபடியே பதிவு போட்டுவிட்டீரே. பகிர்வுக்கு நன்றி. உங்க பதிவு படம் பார்க்க வைக்கிறது.

FOOD said...

அருமை, அருமை அத்தனையும் அருமை.

எறும்பு said...

நன்றி புதிய மனிதா
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி Philosophy பிரபாகரன்

எறும்பு said...

அப்துல்லா அண்ணே நான் என்னதான் முயன்றாலும் உங்க அளவுக்கு வர முடியாது.. நன்றி

எறும்பு said...

நன்றி அன்பரசன்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சிவா
நன்றி எஸ் கே

எறும்பு said...

நன்றி மரா (படம் பார்த்தாச்சா, இல்லையா)


நன்றி Food

Vasudevan Tirumurti said...

வெகு நாட்கள் முந்தி நண்பர் ஒருவர் சொன்னார். புறாக்களை கவனித்தால் நல்லபடி குடும்பம் நடத்துவது எப்படி என்று தெரிந்து கொள்லலாம் என்று! அருமையான பதிவு!