Saturday, June 29, 2013

செல்ல மகள் பள்ளி செல்ல - II

செல்ல மகள் பள்ளி செல்ல I part படிக்க

முதல் நாள் நான் உடன்  இருந்ததால் அமைதியாக இருந்த சிவாஞ்சலி, ரெண்டாவது நாள் அவள் வகுப்பை நெருங்கியதும் காலை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும்  அழுகை கச்சேரியை நடத்தி கொண்டிருந்தன. கிளாஸ் மிஸ், ஏறக்குறைய எல்லா குழந்தைகளையும் பெற்றோர்களிடம் இருந்து புடுங்கி வகுப்புக்குள் அனுப்பி கொண்டிருந்தார். தப்பி ஓடப்பார்த்த சிறுவனை உள்ளே தள்ளி வகுப்பு கதவு அடைக்கப்பட்டது. சில அம்மாக்கள் போக மனம் இல்லாமல் வகுப்பின் ஜன்னலுக்கு அருகில் நின்று எட்டி எட்டி பார்த்துகொண்டிருந்தனர். மிஸ் மறுபடியும் வெளியே வந்து எல்லாரையும் விரட்ட ஆரம்பித்தார். எல்லாரும் வீட்டுக்கு போங்க, எல்லாம் ரெண்டு நாள்ல சரியாகிடும், நீங்க இப்படி எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தா உங்களை பார்த்துட்டு இன்னும் அழுவாங்க என்று சொல்லியும் தயங்கி தயங்கி வெளியே சென்றனர்.

மதியம் வீட்டுக்கு வந்த சிவாஞ்சலியிடம், கிளாஸ்ல என்னமா பண்ணுனீங்க?
நான் அழுனனா, எல்லாரும் அழுனான்களா மிஸ் வந்து எல்லாருக்கும் காஃபி ஊத்துன சாக்லேட் (coffee bite) கொடுத்தாங்க.அப்புறம் சோட்டா பீம் கார்டூன் போட்டு காமிச்சாங்க அப்பா,அவ்ளோதான்.

அடுத்த ரெண்டு நாட்கள் கொஞ்சம் சிணுங்கி அதற்கு அடுத்த நாளில் இருந்து ஜாலியாக போக ஆரம்பித்தாள். இன்னிக்கு ஜானி ஜானி எஸ் பாப்பா சொல்லி கொடுத்தாங்க. அவள் கீ போர்டை தூக்கி வந்து அப்பா, இதுல மியூசிக் காலியாகிடுச்சு (அர்த்தம் : பேட்டரி போயிடிச்சு, மாத்தனும்) வேற வாங்கி கொடுங்க. நீதான் சமத்தா ஸ்கூலுக்கு போற இல்லை வேற வாங்கி தர்றேன். ரெண்டு கையையும் அகல விரித்து, இவ்ளோ மியூசிக் வாங்கி குடுங்கப்பா என்று சிரித்தாள்.

காலையில் அசந்து தூங்கும் குழந்தையை எழுப்பி கிளப்புவதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்ல வேண்டும்.வீட்டு வாசல்ல ஒரு யானை குட்டி வந்து நின்னு உன் பேரை சொல்லி கூப்பிடுது சிவாஞ்சலி.படுக்கையில் இருந்து இறங்கி வாசலுக்கு ஓடினாள். எங்கப்பா? இவ்வளவு நேரம் நின்னுச்சா, நீ வரலைனதும் அது ஜுக்கு போயிடுச்சு.

பிங்க்கி உனக்கு முன்னாடியே எந்திருச்சு குளிக்கப்போகுது,சிவாஞ்சலி. பிங்க்கி, ப்ரௌனி, ட்வீட்டி, ஃ பிராக்கி எல்லாம் அவளின் பஞ்சு பொம்மைகள்.நீ பிங்க்கியை குளிப்பாட்டு, நான் உன்னை குளிப்பாட்டி விடறேன் சரியா?? அவள் குளித்துக்கொண்டே பிங்க்கியை முங்காச்சு போடேறேன்னு சொல்லி வாளி தண்ணிக்குள் முக்கி எடுத்தாள்.பள்ளிக்கு கிளம்பி வெளியே வந்து, இருங்க வர்றேன்னு என்று  சொல்லி வீட்டுக்குள் ஓடினாள். பொம்மைகள் இருக்கும் இடத்துக்கு அருகில் சென்று, நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வர்றேன் என்று கூறியவள் அவள் ஆச்சியிடம், பிங்க்கிய பத்திரமா பார்த்துக்குங்க என்றாள்.வாளிக்குள் இருந்து எட்டி பார்த்து வழி அனுப்பி வைத்தது பிங்க்கி.

மாலை நான் வேலை முடித்து வீட்டுக்கு செல்லும்போது பிங்க்கியையும் ப்ரௌனியையும் மடியில் வைத்து கொண்டு chubby cheeks chubby cheeks என்று பாடி கொண்டிருந்தாள்.முகம் கொள்ளா சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தது பிங்க்கி.


2 comments:

ராஜி said...

என் பிள்ளைகள் பள்ளிக்கு போனதை மீண்டும் கண் முன் கொண்டு வந்தது உங்க பதிவு

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்