Thursday, June 27, 2013

செல்ல மகள் பள்ளி செல்ல...

என் மகள் சிவாஞ்சலி இன்று முதல் முறையாக பள்ளிக்கு சென்றாள். இது வரை ப்ளே ஸ்கூலுக்கு எதுவும் அனுப்பியதில்லை. பள்ளியில் எப்படி இருப்பாளோ என்று பயந்து கொண்டிருந்தோம்.பள்ளி செல்ல அவளுக்கு பேக், ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தபோது அப்பா எனக்கு மொபைல் போன் வேணும் என்று கேட்டு அதிர வைத்தாள். ஸ்கூலுக்கு போனா உங்ககிட்ட எப்படி பேசுவேன், எனக்கு ஃபோன் வேணும் என்றாள். இப்பதான் எல்கேஜி போறா, இன்னும் இவ ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சு மத்த குழந்தைகள் கிட்ட பழகி அதுக பழக்கவழக்கங்களை கத்துக்கிட்டு இன்னும் என்னனென்ன கேக்க போறாளோ என்று நினைக்கும்போதே குதூகலமாக இருக்கிறது.

புத்தகப்பை, சாப்பாட்டு பை,டிஃபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் எல்லாம் பிங்க் கலர். (மேட்சிங் மேட்சிங் தான் வேணும்). அதே சமயம் நான் பள்ளிக்கு செல்லும் போது RMKV துணிக்கடையில் கொடுத்த மஞ்சள் பையில் டிஃபன் பாக்ஸை எடுத்து சென்றது ஞாபகம் வந்தது.

இன்னும் சிவாஞ்சலிக்கு யூனிபாஃர்ம் வராததால் அவளுக்கு என்ன டிரஸ் போடலாம் என்று மனைவி கேட்டபொழுது, BORN TO BE FAMOUS BUT FORCED TO GO TO SCHOOL என்று பெரிதாக வாசகம் பொறித்த டி சர்ட் ஒன்று என் பெண்ணிடம் உண்டு, அதை போட்டு விடு என்றேன். அதெல்லாம் முடியாது நான் வேற ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேன் என்று பார்த்த பார்வை உங்க கிறுக்குத்தனத்தை எல்லாம் இதுல காட்டாதிங்க என்பது போல இருந்தது.

இன்று,வழக்கமாக பத்து மணி வரை தூங்கும் குழந்தையை வலுக்கட்டாயமாக எழுப்புவதற்கே கஷ்டமாக இருந்தது. அவள் கிளம்பிய பிறகு, அவளை சுத்தி உட்கார்ந்து என்னுடைய அம்மா, என் மனைவியின் அம்மா, மனைவியின் தம்பி எல்லாரும் அள்ளி அள்ளி வீசிய அறிவுரைகளை (உதா : பிஸ் வந்தா உடனே மிஸ் கிட்ட சொல்லிடனும்,ஒழுங்கா படிக்கணும், யாரு வந்து கூப்பிட்டாலும் போயிட கூடாது.யாரு எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது ..etc....)கேட்டு மிரள மிரள விழித்தபடி என்னுடன் வந்தாள்.

மிருகங்கள், பழங்கள், கதை, தமிழ் ஆங்கில எழுத்துக்கள் வரையப்பட்ட வண்ணமயமான வகுப்பறை. இன்று ஒரு நாள் மட்டும் பெற்றோர்களை வகுப்பறையில் அனுமதித்தனர்.ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு.ஒரு மணி நேரமும் அவளது குட்டி நாற்காலிக்கு பக்கத்தில் நானும் அமர்ந்திருந்தேன். வித விதமான குழந்தைகள். பக்கத்து இருக்கை குழந்தையிடம் உன் பெயர் என்ன என்று கேக்க அது அழகாக வெட்கப்பட்டுக்கொண்டு அம்மா மடியில் முகம் புதைத்து கொண்டது. ஒரு சிறுவன் கண்ணீரும் தூக்கமுமாயிருந்தான். அவன் அம்மா அவனை பாத்திரம் தேய்ப்பது போல் தேய்த்து குளிப்பாட்டி  இழுத்து வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இன்னொரு வாலு, நின்றுகொண்டு உட்கார வைத்திருந்த சிறிய நாற்காலியை தலையில் கவுத்தி வைத்து கொண்டு நின்றது. அவன் அம்மா சேட்டை பண்ணாம பேசாம உட்காரு என்று அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தார்.

பத்து நிமிடம்  கூட இல்லை அதற்குள் சிவாஞ்சலி வீட்டுக்கு போகலாம் என்று அனத்த ஆரம்பித்தாள். இந்த மாதம் மட்டும் அரை நாள்தான் பள்ளி. திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்லும்பொழுது, மைதானத்தில் இருந்த ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டினம் எல்லாவற்றையும் காட்டி கூட்டி வந்தேன். ஹையா, இனிமே பார்க்குக்கு போகவேண்டாம் நான் தினம் ஸ்கூலுக்கு வந்து ஊஞ்சல், சறுக்கு மரம் விளையாடுவேன் என்று குதித்து கொண்டே வந்தாள்.

எனக்கு இன்று, வாழ்க்கை இன்னும் அழகாகிவிட்டது போல் தோன்றியது. ஏனோ காலையில் இருந்து மனம் சந்தோசமாயிருக்கிறது.

4 comments:

மோகன் குமார் said...

சிவாஞ்சலி புண்ணியத்தில் 2 வருஷத்தக்குப்புறம் ஒரு போஸ்ட்டு ! ரைட்டு !

ஆமா மிஸ் எப்படி? அழகா இருந்தாங்களா :))

senthil kumar said...

தல உங்க கவிதை படித்தேன் ........... இந்தக் காலத்தில் இப்படி ஒரு கவிதையா? ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப........
உங்க கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.......... நானும் காமெடி தான் ......

ராஜி said...

நாமலாம் மஞ்சப்பைல ஒரு நோட்டும், ஒரு சிலேட்டும் கொண்டு போனோம்.., அதையும் தூக்க சிரமப்பட்டுக்கிட்டு மாட்டு வண்டி ல மாட்டிட்டு காலாற நடந்தோம். ஆனா, இன்னிக்கு பிள்ளைகள் எம்புட்டு நோட்டு புத்தகம் சுமக்குறாங்க

எறும்பு said...

ஆகா, ரெண்டு வருஷம் கழிச்சு பதிவு போட்டாலும் முதல் கமெண்டே பிரபல பதிவரோடது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.மோகன்குமார் அண்ணே, இது ப்லஸ்ல ஷேர் பண்ணியிருந்தேன். சேமிப்பிற்காக இங்க ப்ளாக்ல போஸ்ட் பண்ணியிருக்கிறேன். அம்புட்டுதேன்.