Monday, January 25, 2010

சாலையோரம் - தொடர் இடுகை..


இது ஒரு தொடர் இடுகை... அழைத்த விதூஷ் வித்யாவிற்கு நன்றி. இதே தலைப்பில் உள்ள பிறரின் இடுகைகள் இங்கே.

வித்யா
பலாபட்டறை
சந்தனமுல்லை
தீபா
சங்கவி

பத்து வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த புதிதில் நான் வேலை பார்த்தது ஜெராக்ஸ் மெசின் சர்வீஸ் எஞ்சினியராக. என்னுடன் சேர்த்து அந்நிறுவனத்தில் ஒரு இருபது பேர் எஞ்சினியராக வேலை பார்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் சென்னை ஏரியாவை பிரித்து கொடுத்திருந்தார்கள். எனக்கு தலைமை செயலகம் மற்றும் எழிலகம் பகுதி. இதற்கு பக்கத்து ஏரியா எஞ்சினியரின் ஒத்துழைப்பும் தேவை. என்றாவது நான் விடுமுறை எடுத்தால், அவர் என்னுடைய பகுதியையும் சேர்த்து பார்த்து கொள்வார். இப்படிதான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது. அவன் பெயர் சுந்தர். திருவல்லிக்கேணி பகுதி எஞ்சினீயர். இருவரும் சேர்ந்து சுத்தாத இடம் இல்லை. அடிக்காத பீர் இல்லை. வேலை முடிந்ததும் பைக்கை நேரே கொண்டு போய் ஸ்டெல்லா மாரிஸ் காலஜ் முன்னாடி நிறுத்தி அடிக்காத சைட்டு இல்லை. குடியும் கூத்துமாய் இருந்த வேலையில் சுந்தர் காதல் வயப்பட்டான். உங்களுக்கே தெரியும், ஒவ்வொரு ஜெராக்ஸ் கடையிலும் வயசு பெண்கள் இருக்ககூடிய சாத்தியகூறுகள் அதிகம். அப்படி ஒரு கடையில் இருந்த பெண்ணின் மேல் காதல்.ஆனால் சொல்ல தயக்கம். தண்ணி அடித்தால் புலம்பல் அதிகமாகிவிடும். நாளைக்கு எப்படியும் சொல்லிடுவேண்டா, என்பான். ஆனால் அது நிகழ்ந்ததே இல்லை. அந்த பெண்ணுக்கும் இவன் மேல் காதல் இருந்திருக்கக்கூடும். சில சமயம் அந்த பெண் வேலை பார்த்த ஜெராக்ஸ் மசினில் பிரச்சினை என்று பேஜர் ஒலிக்கும். வேண்டுமென்றே நான் போய் நிற்பேன். பிரச்சினை எதுவும் இருக்காது. அவர் வரலீங்களா என்று கேட்டு தலையை குனிந்து கொள்வாள். இந்த கண்ணாமூச்சி நீண்ட நாட்களுக்கு நீடித்தது. நான் சுந்தரிடம் அடிக்காத குறையாக சொல்ல சொல்லி வற்புறுத்த, சரிடா இந்த தீபாவளிக்கு ஊருக்கு போய்ட்டு வந்து கண்டிப்பா அவகிட்ட சொல்றேன். என்ன ஆனாலும் சரி, என்றான். நாளைக்கு மெசேஜ் அனுப்புவேன். என்னைய கொண்டு போய் ஸ்டேசன்ல விடனும். இந்த தடவை வீட்ல எல்லாருக்கும் டிரஸ் எடுத்திருக்கேன். மறக்காம நாளைக்கு வந்திரு. ஆனால் அடுத்த நாள் எனக்கு வாடிக்கையாளர்கள் அழைப்பு அதிகம் இருந்ததால் நான் போகவில்லை.

இரவு ஏழு மணிக்கு அலுவலகத்தில் இருந்து பேஜர் மெசேஜ். sundar met with an accident. seriously injured.admitted in KMC.அரசு பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்ததால் அரசாங்கம் தனியார் ஓட்டுனர்களை வைத்து பேருந்தை இயக்கிய நேரம் அது. ஹோட்டல் தாசப்ரகாஷ் தாண்டி, எக்மோருக்கு திரும்பும் மேம்பாலம் அருகே சுந்தரின் வாழ்வு சிதைக்கப்பட்டது. பைக்கை ஓட்டிச்சென்ற மற்றொரு நண்பருக்கு எந்த காயமும் இல்லை. ஆனா சுந்தருக்கு தலை பிளந்து விட்டது.

தலையில் பலமாக அடிபட்டதால் சுந்தர் கோமா நிலைக்கு சென்றுவிட்டான். அறை குறை உயிரோடு இருந்த அவன் உடலை வைத்து கே யம் சீயில் நிகழ்ந்த
பணப்பிடுங்கல்கள், காவல் நிலையத்தின் மூலம் தகவல் அறிந்து இந்த விபத்தை கேஸ் போட்டு காசாக்க நினைத்த தேங்காய் மூடி வக்கீல்கள், இவர்களை பற்றி தனியாக எழுதலாம். பின்பு அவனை வடபழனி விஜயா மருத்துவமனைக்கு மாற்றினார்கள். சில அறுவை சிகிச்சைக்கு பிறகு அவனை ஊருக்கு தூக்கி போனார்கள்.விபத்தை அருகில் இருந்து பார்தததினால் அதிர்ச்சி அடைந்த, பைக் ஓட்டிச்சென்ற நண்பருக்கு மன நல சிகிச்சை அளிக்கப்பட்டது. சுந்தர், ஏறக்குறைய பத்து மாத கோமாவிற்கு பிறகு அவனுக்கு நினைவு வந்தது. ஒரு வருடம் கழித்து, சிகிச்சைக்காக அவனை சென்னை கூட்டி வந்திருந்தார்கள். சில விசயங்கள் தவிர எதுவும் அவனுக்கு நினைவில்லை. விபத்தில் இழந்திருந்த முன் பற்கள், நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்ததினால் குண்டாகி இருந்த அவன் உடல் அவனை அடையாளம் தெரியாமல் மாற்றி இருந்தது. அவன் அம்மா என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைக்க முயற்சித்தார்கள். என்னை தெரிந்த மாதிரி சிரித்து வைத்தான். அவன் கண்கள் எதையோ தேடுவதை போல அலைபாய்ந்து கொண்டிருந்தது. நான் சொன்ன நிறைய விஷயங்கள் அவன் நினைவுக்கு வரவே இல்லை. இதற்கு அவன் பேசாமல் இறந்திருக்கலாம் என்று நினைத்தேன். அடுத்த நாள் அவர்கள் ஊருக்கு போவதாய் கால் வந்தது. கண்டிப்பாக ஸ்டேஷன் வருகிறேன் என்று கூறி போகவில்லை.

அலுவலகத்தில் மாற்றல் வாங்கி வேறு பகுதிக்கு சென்று விட்டேன். அந்த பெண்ணையும் இன்று வரை சந்திக்கவே இல்லை.

பின் குறிப்பு : -

இதுவரை தொடர் இடுகை எழுதிய அனைவரும் சாலையில் அவர்கள் சந்தித்த, கேள்விப்பட்ட விபத்தை பற்றி எழுதி உள்ளார்கள்.கவனமாக இருக்க சொல்லி அறிவுறுத்துகிறார்கள். நான் எந்த அறிவுரையும் கூற போவதில்லை. காரணம் முதலாவதாக,நீங்கள் எப்படியும் அதை பின்பற்றபோவதில்லை, இரண்டாவது அனுபவங்கள் தரும் அறிவுரைதான் (சற்றே முகத்தில் அறைந்து கூறினாலும்) புரிய வைக்கும். நீண்ட வருடங்களாக என்னுள் இருந்த சம்பவம் தோழி வித்யாவின் அழைப்பால் இறக்கி வைத்துள்ளேன். அவருக்கு என் நன்றிகள் பல.
சுந்தர் பெயர் மாற்றப்பட்டுள்ளது.






********************************************************************************

13 comments:

Paleo God said...

என்ன சொல்றதுன்னே தெரியல RG கலாய்க்கலாம்னுதான் வந்தேன்..ப்ச் கலங்கிட்டேன்..:(

ஜெட்லி... said...

நீங்கள் எப்படியும் அதை பின்பற்றபோவதில்லை, இரண்டாவது அனுபவங்கள் தரும் அறிவுரைதான் (சற்றே முகத்தில் அறைந்து கூறினாலும்) புரிய வைக்கும்....


u r rite....

எறும்பு said...

ஒரு வேண்டுகோள்.ஜெட்லி சங்கர் இந்த இடுகையை தொடரலாமே?..

sathishsangkavi.blogspot.com said...

எப்படி சொல்வது என்று தெரியவில்லை...

சார் நானும் ஒரு சாலையோரம் தொடர் எழுதியிருக்கேன்.... என்னை விட்டுட்டிங்க

நேரம் இருந்தா பாருங்க...

எறும்பு said...

//சார் நானும் ஒரு சாலையோரம் தொடர் எழுதியிருக்கேன்.... என்னை விட்டுட்டிங்க//

I have added your link also...

Deepa said...

:-( இந்த இடுகை எழுதும் போதே தோன்றியது. சிலருக்கு மிக மோசமான நினைவுகளைக் கிளறிவிடக்கூடுமே என்று. மன்னிக்கவும்.

//இரண்டாவது அனுபவங்கள் தரும் அறிவுரைதான் (சற்றே முகத்தில் அறைந்து கூறினாலும்) புரிய வைக்கும்.//
100/100 சரி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பின் குறிப்பு சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.. அறிவுரை என்றாலே யார் தான் கேட்கிறார்கள்.. ஆனால் நெருங்கிய யாராவது அடிபட்டு கஷ்டப்பட்டு அவர்களுக்கு புரியவைக்கிற கொடுமை எப்பொழுதாவது நடந்தேறிவிடுகிறது என்பது தான் வருத்தம்..

எறும்பு said...

//:-( இந்த இடுகை எழுதும் போதே தோன்றியது. சிலருக்கு மிக மோசமான நினைவுகளைக் கிளறிவிடக்கூடுமே என்று. மன்னிக்கவும்.//

உங்களுடைய தவறல்ல.. இந்த சம்பவம் நீண்ட நாட்களாக என்னுள் இருப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. அன்றைக்கு நான் ஆனந்த்திடம் சொன்ன மாதிரி, அவனை ஸ்டேசனில் ட்ராப் பண்ண நான் போய் இருந்தால் அவனுக்கு இந்த மாதிரி ஆகி இருந்திருக்காதோ என்ற எண்ணம் இப்பொழுதும் உண்டு.

Vidhoosh said...

ரொம்ப அருமையான இடுகை. சொல்லாமல் சொல்லிவிட்ட செய்திகள் நிறையா.நன்றி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஏறக்குறைய பத்து மாத கோமாவிற்கு பிறகு அவனுக்கு நினைவு வந்தது//
படிச்சப்போ அப்பாடான்னு இருந்தது.

நசரேயன் said...

யோசிக்க வைத்த இடுகை

பின்னோக்கி said...

என்னக் கொடுமைங்க. படிக்கும் போதே மனம் பதறுது.

சின்ன வயசு பசங்க 180சிசி பைக்ல பறக்கும் போது பதறுது மனசு. இளரத்தம் காரணம்ங்கிறாங்க. ஆனா ! அந்த ரத்தம் சாலையில் சிந்தும்போது....

சந்தனமுல்லை said...

:-(( மனம் கனத்து போயிருக்கிறது...எதையும் சொல்ல இயலவில்லை!