Thursday, December 3, 2009

அம்பாசமுத்திர கதைகள் – ஒத்தை கிளியாஞ்சட்டி


கார்த்திகைக்கு சீக்கிரமே பள்ளிக்கூடம் விட்ருவாங்க. தீபாவளி மாதிரியே கார்த்திகையும் நல்ல இருக்கும்.

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருல சிவன் கோயிலுக்கு பக்கத்துல இருக்கு எங்க வீடு. வாசல்ல நிறைய கம்பி போட்ட தடுப்பும், கதவும் கொண்ட வீடு. எங்க வீட்ல கிளியாஞ்சட்டி அளவுக்கு வெள்ளிளையும் பித்தளையிலும் நிறைய விளக்கு உண்டு. எல்லாத்தையும் மரப்பெட்டில போட்டு பரணைல வச்சிருப்பாங்க. கார்த்திகைக்கு முன்னாடி அப்பா பெட்டிய எடுத்து தர, அம்மாவும் ஆச்சியும் எல்லா விளக்கையும் தொடச்சு, பெரிய பெரிய தாம்பூலத்தட்ல சுத்தி அழகா அடுக்கி வப்பாங்க. அன்னிக்கு வாசல்ல இருக்குற எல்லா கம்பிக்கு இடையிலும் விளக்கு பொருத்தி வைப்போம். தாம்பூலதட்ல இருக்குற விளக்கெல்லாம் பொருத்தி எல்லா ரூமிலும் ஒவ்வொரு தட்டா வைப்போம்.

அப்புறம் அம்மா பண்ற கார்த்திகை பொரி. வெல்லத்தை நல்லா சூடா காச்சி பொரில கலந்து, நெய்யுல வறுத்த சிறு சிறு தேங்காய் துண்ட அதுல போட்டு விரவி வச்சாங்கனா, ஒரு மாசத்துக்கு வரும். நெதமும் பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே, ஆச்சி ஒரு வட்டகை முட்ட போட்டு தரும். அத தின்னுடுதான் விளையாட போவேன்.

விளையாட்டுன்னு சொன்ன உடனேதான் ஞாபகம் வருது. சூந்துக்குச்சி. ஒரு வாரத்துக்கு முன்னாடியே , சந்தைல அப்பா சூந்துகட்டு வாங்கி வந்த்ருவாக. எனக்கு ஒரு கட்டு, அண்ணனுக்கு ஒரு கட்டு. அகஸ்தியர் கோயில் கிட்ட வேற சூந்து கடை போட்ருபாங்க. சூந்து கட்டை மலை மாதிரி குமிச்சி வச்சிருப்பாங்க. கட்டு சுரண்டை , சங்கரன் கோயில்ல இருந்து முருகன் பஸ்ல வந்து இறங்கும். சூந்துக்குச்சி தக்கையா குழல் மாதிரி இருக்கும். இப்ப சிகரட் பிடிக்கிற சேக்காளி பய புள்ளைங்க எல்லாம் முதல்லே சூந்துக்குச்சி பிடிச்சுதான் கத்துக்கிடாங்க. நானும்தான். ஒரு பக்கம் பத்த வச்சா பீடி மாதிரியே பிடிக்கலாம். என்ன ஒண்ணு, நின்னு எரியாது. திரும்ப திரும்ப பத்த வைக்கணும். திருட்டுத்தனமா பிடிப்போம். பொறவு, சூந்துக்கட்டை வாசல்ல வச்சு எரிப்போம்.

தாத்தா, சிவன் கோயில்ல சொக்கப்பனை எரிச்சு முடிஞ்ச பிறகுதான் சூந்துக்கட்டை எரிக்கணும்னு சொல்லுவாரு. சிவன் கோயில் வாய்கால் கரையோரமா இருக்கு. அங்கதான் சொக்கப்பனை கொளுத்துவாங்க. சாமிக்கு நேராத்தான் சொக்கப்பனை இருக்கணுமாம். இந்த கரைல அதுக்கு எடம் இல்லைன்னு, எதிர் கரைல பனைய நட்டு சுத்தி பனை ஓலையை கட்டி வச்சுருபாங்க. சிவன் கோயில்ல பாதி பனை மரம்தான் இருக்கும். அகஸ்தியர் கோயில் போனீங்கன்னா முழு பனைமரத்தையும் நட்டு ஓலை கட்டி வச்சுருபாங்க.

ஏன் நம்ப கோயில்ல மட்டும் முழுப்பனை வைக்கலைன்னு கேட்டா, நம்ப சுப்பாமணி இல்ல, அதான் அவருதான் நம்ம சிவன் கோயில் பூசாரி. அவரு சொல்லுவாரு, அது முதலியாருங்க நடத்துற கோயில்டே. நம்ப ஊர்ல அவங்க ஆளுங்க இருக்குற தெரு மட்டும் இருபத்தி ஆறு இருக்கு. எல்லார்டையும் துட்டு வசூலிச்சு எத பண்ணாலும் பெரிசா பண்ணுவாங்க. நம்ப கோயிலு கவர்மெண்டு நடத்ரதானே அதான் இப்படி. இதுக்கே, அவங்ககிட்ட உத்தரவு வாங்கறதுகுள்ள போதும் போதும்னு இருக்கு. அவரு நிஜப்பேரு சுப்பிரமணி. எல்லாரும் கூப்டு கூப்டு சுப்பாமணி ஆக்கிட்டாங்க. பக்கத்துக்கு ஊரான பிரமதேசத்தில் இருந்து சைக்கிள்ல வருவாரு. நெதம், வாய்க்கல்ல இருந்து தண்ணி எடுத்து எல்லா சாமியையும் குளிப்பாட்டி தீபாராதனை காட்டுவாரு. இவருக்கு தொணையா ஒரு ஓதுவார் உண்டு.

சொக்கபனைய கொளுத்த எதிர் கரைக்கு போனும்ல. வாய்கால்ல தண்ணி ஓடுச்சுன்னா, கோயில்லுக்கு பின்னாடி போய் அங்கிருக்கிற பாலம் வழியா வாய்க்கால கடந்து எதிர் கரைக்கு வரணும். சுப்பாமணி தீபதட்டை எடுத்துகிட்டு முன்னாடி நடக்க, ஓதுவார் பின்னாடி மணி அடிச்சுட்டே போவாரு. ரெண்டு பெரும் நடந்து போற அழக பாக்க மொத்த தெரு சனமும் வாய்கால் கரைல கூடி நிக்கும்.

ஒரு வருஷம், சுப்பாமணி பாலத்த சுத்தி மறுகரைக்கு வர்றதுக்குள்ள, வாய்கால் வழியா நீந்தி போய் சொக்கபனைய கொளுத்தி விட்ட கூட்டத்தில நானும் உண்டு. சொக்கபனை எரிஞ்சதுக்கு பொறவு, அதுல கட்டி இருந்த பாதி எரிஞ்ச கம்பை எடுகிறதுக்கு, பெரிய தள்ளு முள்ளு நடக்கும். அத எடுத்துட்டு போய் வீட்ல வளர்ற செடி கொடிக்கு, முட்டு கொடுத்தா செடி நல்லா வளரும்னு சொல்லுவாங்க. ஒரு வருஷம், தீபாவளிக்கு வாங்கின அணுகுண்டு பாக்கெட்டை சொக்கபனைகுள்ள போட்டு, சுப்பாமணி தீ வச்சதும், அது வெடிச்சு சுப்பாமணி மிரண்டதும் உண்டு.

இந்த வருஷம் கார்த்திகை, ஊரிலிருக்கும் அம்மாவுக்கு போன் செய்தேன். என்னம்மா பண்ணினே?. நீயும் அண்ணனும் ஆளுக்கு ஒரு பக்கம் போய்டீங்க, நானும் அப்பாவும்தனே இருக்கோம். நீங்கள்லாம் வந்துருதீங்கன்னா நல்லா இருந்திருக்கும். வெளிச்சம்தான் வீடு பூரா இருக்கு, மனசு நிறையவே இல்லடா. சரி, சிவன் கோயில்லுக்கு போனியாமா?போனேண்டா, அங்க எடுத்து பண்றதுக்கு ஆளே இல்ல. சும்மா ஒரு குச்சில நாலஞ்சு பன ஓலைய கட்டி சொக்கபனைனு எரிச்சாங்க. சுப்பாமணி இல்லையாமா? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அவருக்கு கால்ல புண்ணு வந்து ஆறவே இல்லை. போன மாசம் கால ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க. இப்ப வீட்ல படுத்த படுக்கையாதான் இருக்காரு.அவருக்கும் சேத்துதான் சாமி கும்பிட்டு வந்தேன். ஆமா நீங்க என்ன பண்ணுனீங்க?.

இந்த கேள்விக்கு, என் மனைவி சம்பிரதாயமாக ஏற்றி இருந்த ஒத்தை
கிளியாஞ்சட்டி, என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.


34 comments:

மணிஜி said...

உரையாடல்களை பத்தி பிரிச்சு எழுதினால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்...வாழ்த்துக்கள்...

எறும்பு said...

நன்றி தண்டோரா அண்ணா... இப்பதான் முதல் முயற்சி ... உங்களை மாதிரி ஆட்களின் வழிகாட்டலுடன் மேலும் நல்லதா குடுக்க முயற்சி பண்றேன்.

வால்பையன் said...

அருமையா வந்துருக்கு தல!

தொடர்ந்து எழுதுங்கள்!

எறும்பு said...

//வால்பையன் said...

அருமையா வந்துருக்கு தல!

தொடர்ந்து எழுதுங்கள்!//


நன்றி வால் அண்ணா

Thamira said...

அம்பாசமுத்திரத்தை அப்படியே நினைவிலாடவைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள், பலம் பலவீனம் தெரியவரும்.!

ரவி said...

கலக்கறீங்க.....

எம்.எம்.அப்துல்லா said...

தாமிரா சொன்னதுக்கு பெரிய ரிப்பீட்டு

:)

thiyaa said...

அருமை யான பதிவு
நல்வாழ்த்துகள்

Unknown said...

template கலர் படிக்க கஷ்டமா இருக்கு..., கதை நல்லாருக்கு .., வாழ்த்துக்கள்..,

☼ வெயிலான் said...

ரொம்பவுமே அருமை எறும்பு!

அம்பை ஒரு சொர்க்கம் என்பது மட்டும் தெரிகிறது.

இப்போ சென்னை......கஷ்டம் தான்.

கல்யாணி சுரேஷ் said...

உங்களுக்கு அம்பாசமுத்திரமா? எனக்கும் கூட. மேலப்பாளையம் தெருவில் யார் வீடு னு தெரிஞ்சுக்கலாமா?

அகல்விளக்கு said...

நல்லாருக்கு நண்பா...

தொடர்ந்து எழுதுங்கள்

பாபு said...

நல்ல பதிவு
தொடர்ந்து எழுதுங்கள்

"உழவன்" "Uzhavan" said...

நல்லா ரசனையா எழுதியிருக்கீங்க..
சூந்துக்கட்டை னா என்ன பாஸ்?

BALAMURALI said...

அருமையான பதிவு

Unknown said...

kallakreenga ponga

Santhini said...

இதே போல்தான் எங்கள் ஊரிலும் சூந்து கட்டை கொளுத்துவார்கள். கிராமம் என்பதால் அவரவர் வீட்டிலிருந்தே கட்டு எடுத்துப்போவோம். (அறுவடை செய்த சோளதட்டு கட்டுதான் சூந்துக்கட்டு எனப்படுவது ) எல்லா கட்டுகளையும் கோயில் முன்பாக குவித்து வழிபட்டு பின் கொளுத்துவது எங்கள் கிராமத்து மரபு.
பெரும் தீபம் ஏற்றுவதன் அறிகுறியாகவே இது செய்யப்படுகிறது என்பது என் அனுமானம்.
எழுத்து நடையும் மொழியும் இனிமை ! வாழ்த்துக்கள்

எறும்பு said...

தண்டோரா ,வால்பையன் ,ஆதி மூல கிருஷ்ணன் ,அப்துல்லா அண்ணே ,செந்தழல் ரவி ,தியாவின் பேனா ,பேநா மூடி
வெயிலான் ,கல்யாணி சுரேஷ்,அகல்விளக்கு ,பாபு ,உழவன், பாலமுரளி, சாரங்கராஜன், நானும் என் கடவுளும்
தங்கள் வருகைக்கு நன்றி ...
பெரியவக எல்லாம் வந்துடிங்க... இனிமே நான் ரெம்ப கவனமா இருக்கனும் போல..

எறும்பு said...

கல்யாணி சுரேஷ்.... அந்த கதையில் குறிபிட்ட மாதிரி சிவன் கோயில் பக்கம்தான் என் வீடு. மேலதிக விபரங்களுக்கு எனக்கு மெயில் பண்ணுங்க.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

எறும்பு said...

நர்சிம் said...

வாழ்த்துக்கள்...

Thank you..

பின்னோக்கி said...

நர்சிம் பதிவில் பார்த்து வந்து படித்தேன். அருமை..

வெண்ணிற இரவுகள்....! said...

அந்த வழக்கு
மொழி அழகாய் இருந்தது ,,,,,நெதம் என்ற வார்த்தை எனக்கு புதிது.....இப்பொழுது இருக்கின்ற கார்த்திகை விளக்கில்
ஒரு இருள் தெரிந்தது தொடருங்கள் எறும்பு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கார்த்திகையை ஊருல கொண்டாடின உணர்வு..

முன்பு பண்டிகைகள் குடும்பமா கொண்டாடப்பட்டது மாதிரி இருக்கு..நீங்க சொன்னமாதிரி அப்பா எடுத்துகொடுக்க அம்மா துடைச்சுவைக்க நீங்க அடுக்கன்னு.. ஒரு குடும்பமே உழைச்சது.. இப்ப எங்க அப்படியா.. பாதி பேரு டிவியில் பாதி பேரு அலுவலக வேலையில் ந்னு மூழ்கி ..ஒருத்தர் மட்டும் எடுத்து செய்யும்போது போரடிச்சுப் போகுது..கடமைக்கு செய்வதா தான் நகரத்து பண்டிகைகள் இருக்கு..

Unknown said...

It was nice. continue writing... Vani.
kalakkarenga ponga... hmmmmm hmmmm ana neraiya words purinjukka konjam kashtama irukku....

உணவு உலகம் said...

eppa mahanae, kalakkarappa. cigarette kudikka palagiya muyarchi kathaikka illai kavanikkamal vantha vakkumoolama? ithe pola pala kathaikal vara vaalthukkal.

செந்தில் நாதன் Senthil Nathan said...

நரசிம் இடுகை பார்த்து வந்தேன்.அருமையா இருக்கு.

டேம்ப்லடே வண்ணத்த மாத்துங்க. படிக்க கஷ்டமா இருக்கு. மத்தபடி உங்க எழுத்துநடை ரெம்ப புடிச்சுருக்கு.

எறும்பு said...

டெம்ப்லேட் மாத்தியாச்சு... அனைவர்க்கும் நன்றி

ஆடுமாடு said...

//எரிஞ்ச கம்பை எடுகிறதுக்கு, பெரிய தள்ளு முள்ளு நடக்கும். அத எடுத்துட்டு போய் வீட்ல வளர்ற செடி கொடிக்கு, முட்டு கொடுத்தா செடி நல்லா வளரும்னு சொல்லுவாங்க//


அதை வீட்டுக்கூரையில சொருவுனா, காத்து கருப்பு அண்டாதுன்னு எங்கூர்ல சொல்வாவோ..

எறும்பு said...

ஆடுமாடு .. வருகைக்கு நன்றி

ஆம்பூர் பக்கம் போறது உண்டா ?

பஹ்ரைன் பாபா said...

" இப்ப சிகரட் பிடிக்கிற சேக்காளி பய புள்ளைங்க எல்லாம் முதல்லே சூந்துக்குச்சி பிடிச்சுதான் கத்துக்கிடாங்க. நானும்தான்.".. கண்ணா
நீ மட்டுமா குடிச்சி பழகின.. எனக்கும்லா கத்துக்குடுத்த..நல்ல வேலை.. அப்போ சூந்தோட சரி.. நோ சிகரெட்..இப்போ வரை..என்ன இருந்தாலும் அந்த மேலப்பாளையம் தெரு வாழ்க்கைய மறக்க முடியாது.. அது ஒரு கனாக்காலம்.. கோச்சா.. கரையான் மண்டை.. நரயான் மண்டை.. பட்டு லாம் .. இப்போ எங்க இருக்காங்க என்ன பண்றாங்க.. உன் அண்ணன் யாரு கண்ணா??

துபாய் ராஜா said...

நீங்கள்ல்லாம் அட்லீஸ்ட் தமிழ்நாட்டுக்கு உள்ளேயாவது இருக்கீங்க.. எங்க மாதிரி ஆளுங்க நிலைமையை நினைச்சுப்பாருங்க....

ஷங்கி said...

எறும்பு, அருமையான ஒரு, மென்னுணர்வு நினைவுகள். நல்லாயிருக்கு.
அண்ணன் தண்டோரா எனக்கு முதலில் சொன்னதையே உங்களுக்கும் சொல்லியிருக்கிறார். அடுத்தடுத்த இடுகைகளில் அந்த மாற்றத்தைச் செய்து மேலும் சுவாரசியமாக்குவீர்கள்தானே?!

goma said...

ஆழ்வார்குறிச்சி கடையம் இரண்டும் நான் அடிக்கடி விஜயம் செய்யும் ஊர்.நான் சிறுமியாய் சுற்றி வந்த
ஆழ்வார் குறிச்சி ,அம்மா ஊர்.
கடையம் தற்பொழுது என் நாத்தனார் ஊர்.