Thursday, January 13, 2011

நிலையாமை..

ஜனவரி ஒன்று 2011. மாலை நேரம். அந்த நண்பரிடமிருந்து போன்.
என்ன காலைல இருந்து நீங்க போன் பண்ணி வாழ்த்து சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன், என்ன காலே பண்ணலை.

எங்கங்க, நீங்க புத்தாண்டுக்கு சிங்கப்பூர் போறதா சொன்னீங்க, இன்னும் சென்னைல என்ன பண்றீங்க, சிங்கப்பூர் போகலையா?நீங்க சிங்கப்பூர் போய்டதால நினைச்சேன். இன்னும் போகலியா?

ஹலோ நான் இன்னிக்குதான் போறேன்னு சொன்னேன். கால் பண்ண மறந்துட்டேன்னு சொல்லுங்க, எதையாவது சொல்லி சமாளிக்காதிங்க, நான் இப்ப ஏர்போர்ட்ல தான் இருக்கேன். ரிடர்ன் பத்தாம் தேதிதான் வருவேன். போன தடவை போகும்போதே உங்க பொண்ணுக்கு எதுவும் வாங்கிட்டு வரலை. இந்த தடவை ஏதாவது வாங்கி வரேன். Official tour வேலை எப்படி இருக்குனு தெரியலை, பார்கலாம். அப்புறம் இன்னும் நீங்க புத்தாண்டு வாழ்த்து சொல்லலை.

Oh.sorry. Happy new year & wish you a happy journey.

சரி நான் பத்தாம் தேதி உங்கள வந்து பாக்கிறேன்.Bye.

நல்ல நண்பர்.வருடங்களாக நல்ல பழக்கம். ஒரு யோகா வகுப்பில் அறிமுகமானவர். பீகாரில் மூன்று வருடம் யோகம் சார்ந்த பயிற்சிகள் பற்றி படிக்கும்போது, ஒவ்வொரு வருடமும் சேர்ந்தார்ப்போல் பதினைந்து நாட்கள் அங்கே தங்க வேண்டும். பெரும்பாலும் ஒரே அறை கிடைத்துவிடும். பயிற்சியின்போது ஒவ்வொருவர் சொல்லும் அனுபவங்களை வகுப்பில் கேட்டுவிட்டு, அறையில் எல்லோரையும் ரசிக்கும்படி கிண்டல் அடிப்பார். தியானத்தின் போது உள்ளே ஒளி தெரிகிறது என்று சொன்ன சக நண்பருக்கு இவர் வைத்த பெயர் உள்ளொளி சித்தர்.

ஜனவரி 5. ஏதோவொரு மொபைலில் இருந்து இவர் பெயரை குறிப்பிட்டு expired என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த நம்பருக்கு கால் பண்ணியதில், நண்பரின் அப்பாதான்.

ஆமாப்பா, நேத்து போய் சேர்ந்துட்டான். சிங்கப்பூர் ஹோடேல்ல ராத்திரி நீச்சல் கொளத்துல போய் குளிச்சிருக்கான், இவனுக்கு நீச்சல் தெரியாது. அந்த நேரத்துல ஏன் குளிக்கபோனான்னு தெரியலை. தண்ணில முங்கி போய்ட்டான். முப்பத்தி ரெண்டு வயசுதான் ஆகுது, போய்ட்டான்.

பாடி எப்ப வருது?

நாளைக்கு ஏர் இந்திய ப்ளேன்ல வருது. கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் எல்லாம் முடிஞ்சு வர ராத்திரி ரெண்டு மணி ஆகிடும்.போஸ்ட் மார்டம் பண்ண உடம்பு வேற,அடுத்த நாள் காலைலயே இறுதி காரியம் எல்லாம் பண்ணிடலாம்னு இருக்கோம்.

கண்ணமாபேட்டை சுடுகாடு. பரந்து விரிந்து இருந்தது. ஏற்கனவே ஒரு உடம்பு எரிந்து கொண்டிருந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்து கொண்டிருக்க வேண்டி இருந்தது. உள்ளொளி சித்தர் மட்டும் லேசாக அழுது கொண்டிருந்தார். அங்கு இருந்த கூடத்தில் இருந்து வெளியே வந்தேன். சிறிது கூட இடைவெளி இன்றி ஏகப்பட்ட சமாதிகள். அவரவர் வசதிக்கு ஏற்ப கட்டப்பட்ட சமாதி. வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்தார்களோ, இங்கு நல்ல மர நிழல் சூழ இருந்தார்கள். தொழிலதிபர் இங்கே உறங்குகிறார், தனியாக அறை போல கட்டப்பட்ட சமாதி, கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட அரசியல்வாதியின் சமாதி, மண்ணோடு மண்ணாக இணைந்து போய் இருந்த சமாதி, சமாதிகளின் கூடத்திற்கு இடையில் எளிமைக்கு உதாரணமாக சொல்லப்படும் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் சமாதியும் உண்டு. அனைத்தும் நிலையாமையை சொல்லி செல்கிறது.
அனைத்தும் முடித்து வீட்டிற்க்கு சென்று குளித்து முடித்து அமர்ந்த பொழுது, அவ்வளவு தானங்க வாழ்க்கை என்றாள் எங்கோ வெறித்தபடி.
அன்று அவளுடனான கூடலுக்கு மரணம் பற்றிய பயமே பிரதானமாயிருந்தது.



6 comments:

துளசி கோபால் said...

வருந்துகிறேன்:(

Dubukku said...

வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரொம்ப சமீபத்துல தான் நானும் ஒரு நண்பரை இழந்தேன். நீங்கள் சொன்ன அத்தனை உணர்ச்சிகளும் அனுபவித்திருக்கிறேன். காலாம் மருந்தாக இருக்கட்டும்

எல் கே said...

வருத்தமாய் உள்ளது.

Chitra said...

It is sad. :-(

Unknown said...

//அனைத்தும் நிலையாமையை சொல்லி செல்கிறது.//
:=(

R. Gopi said...

:((