ஊரில், ஆச்சிகளின் ஜனத்தொகை கம்மி ஆகிவிட்டது.
அம்பை அகஸ்தியர் கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டிற்கு வருவதற்குள் ஏதாவது ஆச்சியின் கண்ணில் பட்டுவிடுவேன். அது கல்யாணி ஆச்சியா, கோமதி ஆச்சி இல்லை செண்டு ஆச்சியா இருக்கலாம். ஏல அய்யா, இப்பத்தான் வர்றியா, இப்படி எளைச்சு போய்ட்ட? மெட்ராசு ஊர்ல சோறு கிடைக்கலியா, சம்பாதிக்கவும் செய்யணும்,நல்லா சாப்பிடவும் செய்யணும் பாத்துக்கோ என்றபடி ஆரம்பிப்பார்கள்.
நான் ஊருக்கு வந்த விஷயம் தெரிந்ததுமே கல்யாணி ஆச்சி வந்துவிடுவாள்.80 வயதுக்கு மேல் இருக்கும். என் வீட்டின் அருகில் இருக்கும் திருமூலநாதர் சிவன் கோயில்தான் கல்யாணி ஆச்சிக்கு இஷ்ட தெய்வம். கோயிலுக்கு போயிட்டு வருகிற வழியில்,எங்கள் வீட்டிற்கு வந்து தெருவில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து கொண்டு அங்கிருந்தே பேரப்புள்ளே ..பேரப்புள்ளே.. என்று எட்டு வீட்டிற்கு கேட்குமாறு குரல் குடுப்பாள். கோயில் திருநீறையும், ப்ரசாதமா குடுத்த சுண்டலையும் ஒரே கையில் வைத்திருப்பாள். நமசிவாய..நமசிவாய..நல்லா இருடே என்று திருநீரை பூசிவிட்டு சுண்டலை கொடுப்பாள். திருநீறு கலந்த சுண்டல் ஒருவித ருசியுடன் இருக்கும். ஏன் ஆச்சி, இவ்வளவு வயசானபிறகும் இப்படி நெதம் கோயிலுக்கு வரணுமா, வீட்ல இருந்தே சாமி கும்பிட்டாத்தான் என்ன??. உங்க தாத்தா போன பிறகு அந்த சிவன்தானே எனக்கு எல்லாம், நெதம் வந்து பாக்கலைனா பொறவு அவன் கோவிச்சுகுவான்ல என்பாள்.
இந்த ஆச்சி சிறுக சிறுக பத்தாயிரம் ரூபாய் சேமித்து அதை பக்கத்துக்கு வீட்டுக்காரனிடம் கொடுத்து வைத்திருக்க, அவன் ஒருநாள் சொல்லாமல் வீட்டை காலி பண்ணி போய்விட்டான். பார்க்கும் ஓவ்வொரு தடவையும், யையா அவன் எங்கையோ மெட்ராசுலதான் இருக்கானாம், கொஞ்சம் எங்க இருக்கான்னு பார்த்து அவன்கிட்ட அந்த ரூபாயை வாங்கி கொடுயா, இப்படி கடைசி காலத்துல அடுத்தவங்க கையை எதிரபார்க்க வச்சுட்டானேன்னு புலம்புவாள்.
சிவாஞ்சலி பிறந்த பொழுது ஆச்சிக்கு ரெம்ப முடியாமல் போய் விட்டது. அம்மாதான், ஒரு எட்டு போய் கல்யாணி ஆச்சிக்கு புள்ளையை காமிச்சிட்டு அவங்களுக்கு காசு ஏதும் வேணுமான்னு கேட்டு கொடுத்திட்டு வந்திரு என்று அனுப்பி வைத்தாள். கட்டிலில் படுத்திருந்த ஆச்சி கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள். இந்த ரூமுக்குள்ளதான் நடம்மாடிக்கிறேன், இப்பெல்லாம் அந்த சிவனை வந்து பாக்கலைன்னு அவனுக்கு கோவம் போல, என்னையை கூப்டுக்கமாட்டேன்கிறான், எப்ப அவன் கோவம் போகும்னு தெரியலை என்றாள். கிளம்பும்போது ஆச்சி, செலவுக்கு இத வச்சிக்க என்று பணம் கொடுத்தப்போது மறுத்தாள். செத்த இருயா என்றபடி கட்டிலில் இருந்து இறங்கி சுவரை பிடித்தப்படி நடந்து சென்று அலமாரியை திறந்து திருநீர் மறையை எடுத்து வந்தாள். அதில் இருந்தது ஒரு பழைய அஞ்சு ரூபாய் நோட்டு. அதை கையில் கொடுத்து, உன் புள்ளைக்கு எதுவுமே வாங்கி வைக்கலை, இந்த அஞ்சு ரூபாய்க்கு அவளுக்கு ஏதாவது பிஸ்கட் வாங்கிகொடு என்றபடி திருநீரை பூசிவிட்டு நமசிவாய நமசிவாய இந்த குடும்பத்தை நல்லபடியா வை என் சிவபெருமானே என்று ஆசிர்வதித்தாள்.
தேரடிக்கு எதிரில் உள்ள ஏழு வீட்டு வளவில் இருந்தாள் செண்டு ஆச்சி. தேரில் உள்ள மாடன் சிற்பத்திற்கு தினமும் எண்ணை சார்த்தி பூஜை செய்வாள். அவள் தேரடி மாடனை பற்றி பாடும் பாடல் வீடு வரை கேட்கும். படித்து முடித்து வேலை இல்லாமல் சுத்தி கொண்டிருந்த நாட்களில் வெட்டி கதை பேசுவது செண்டு ஆச்சியிடமும் அதே வளவில் உள்ள பரமசிவன் தாத்தாவுடனும்தான்.மாடன்கிட்ட வேண்டிக்க, உனக்கு சீக்கிரமே வேலை கிடைச்சிடும் என்பாள் ஆச்சி. வருடம் ஒருமுறை ஓடிக்கொண்டிருந்த தேர் பழுதாகி, புது தேர் செய்ய பழைய தேரை உடைத்து போட்டார்கள். வருடம் நான்கு ஆகியும் புது தேர் வந்தபாடில்லை. கோயிலுக்கு அருகே, முட்செடிகளுக்கு ஊடே, பழைய தேரின் சிதைந்த பாகங்களுடன் மாடனும் கிடக்க கூடும். வெறிச்சோடி கிடக்கும் வீதிகளில் செண்டு ஆச்சியை அதிகம் காண முடிவதில்லை.
உலகம்மை என்ற உலகாச்சி. அப்பாவின் அம்மை. நான், ஒரே பேரன் என்பதாலும், தாத்தாவின் பெயரையே எனக்கு வைத்திருந்ததாலும் என்னிடம் ஒட்டுதல் அதிகம் தவிர நான் அப்பா அம்மாவுடன் இருந்ததை விட இந்த ஆச்சி தாத்தாவுடன் இருந்தது தான் அதிகம். நான் ஒருமுறை தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, விளக்குல எண்ணை முந்துதோ திரி முந்துதோ யாருக்கு தெரியும் என்றார். இதை கேட்டு கொண்டு வந்த ஆச்சி, எப்பவோ ஊருக்கு வரான் அவன்கிட்ட சாவ பத்தி என்ன பேச்சு என்று சலித்து கொண்டாள். திரிதான் முந்தியது. தாத்தாவின் சாவுக்கு வந்துவிட்டு கிளம்பும் பொழுது, கூட கொஞ்ச நாள் இருந்துவிட்டு செல்ல சொன்னாள். இல்ல ஆச்சி ஆபிஸ்ல லீவு என்று தயங்கி நிற்க, சரி வேலைய பார்த்துக்குங்க, நான் சாவும் பொழுதாவது லீவு நாள்ல சாவ முடியுதான்னு பார்க்கேன் என்றாள்.அப்ப
தாத்தா போன துக்கத்துல நீ இப்பவே போயிருவன்னு நினைச்சேன் என்று
கேலி பண்ணியதும், நான் ஏம்ல இப்ப போறேன், எங்க வீட்டையா எனக்கு சொத்து சேர்த்து வச்சிட்டு போயிருக்காரு, அதை எல்லாம் அனுபவிச்சிட்டு, உன் கல்யாணத்துல பலகார பந்தி, சொதி சோறு எல்லாம் சாப்டுட்டு, உன் பொண்டாட்டியா வரப்போறவ முடிய ரெண்டு ஆட்டு ஆட்டிடுதான் போவேன் என்றாள். தங்கை மகனுக்கு முதல் பிறந்தநாள் தேதி முடிவு பண்ணி எல்லாருக்கும் அழைப்பு அனுப்பி, விழாவுக்கு இரு வாரம் முன்பு, ஆச்சிக்கு உடம்பு ரெம்பவும் முடியாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். நான் பார்க்க சென்ற பொழுது, என்ன தாய் மாமந்தான் முதல்ல வந்திருக்க போல, அடுத்த வாரம் என்னைய விட்டுட்டு எல்லாரும் பிறந்தநாளுக்கு திருச்செந்தூர் போறீங்க இல்ல என்று பொய்யாக கோபப்பட்டாள். உன்னையை யாரு ஆச்சி விட்டுட்டு போவா, உனக்கு தனியா வேன் வச்சு நான் கூட்டிட்டு போறேன் என்று ஆறுதல் கூறினேன். பிறந்தநாளுக்கு மூன்று நாள் முன்பு ஆச்சிக்கு நினைவு தப்பி விட்டது. மருமகனுக்கு மொட்டை அடித்து காது குத்தி முருகனை கும்பிட்டு வெளியே வரும்பொழுது அம்மாவிடம் இருந்து ஃ போன் வந்தது. ஆச்சி போய்டாடா, பேரன் பிறந்தநாள் முடியட்டும்னு இவ்வளோ நாள் உசிரை கையில் பிடிச்சிட்டு கிடந்திருக்கா பாரேன் என்றாள். சொந்த பந்தம் எல்லாம் ஊரிலையே இருக்க, ஆச்சி சாவுக்குன்னு தனியாக லீவ் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.
ஆச்சியின் சாவுக்கு வந்த சேது மாமா, இந்த சரீரம் உங்க ஆச்சி போட்ட அன்னத்துலதான் பொழச்சி கிடந்தது பாத்துக்கோ, அத்தனை பேருக்கு சோறு போட்டு இருக்கா, மகராசி என்று கண் கலங்கி நின்றார்.
அக்கா, நான் இங்க குத்துகல்லு மாதிரி இருக்கேன் எனக்கு முன்னாடி போயிட்டாளே புண்ணியவதி என்று நேரில் வரமுடியாமல் ஃ போனில் வருத்தப்பட்டார்கள் புளியங்குடி ஆச்சி.
ஸ்கூல் லீவு விட்டவுடன் திருநெல்வேலி டவுண் அம்மை ஆச்சி வீட்டுக்கு போய் விடுவேன். வேலம்மாள் ஆச்சி கிண்டும் திருவாதிரை களிக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அதிகம் பேசாத அந்த ஆச்சி, இன்று ஸ்ட்ரோக் வந்து படுக்கையில் கிடக்கிறாள். பழசு எல்லாம் மறந்து போய், மகளையே அடையாளம் காட்ட தெரியாமல் இருக்கிறாள். சிவாஞ்சலியை பார்த்தவுடன் மட்டும் அவளுடன் சந்தோசமாக விளையாடுகிறாள். இன்னொரு குழந்தையாகவே மாறிவிட்டாள்.
கல்யாணத்துக்கு துப்பு சொல்லி,ஊர் பேரையும் ஆள் பேரையும் சொன்னால், அவர் எப்படி நமக்கு சொந்தம், யார்கிட்ட அவங்களை பத்தி விசாரிக்கலாம், என்று பக்கத்து சொந்தம், தூரத்து சொந்தக்காரர்களின் டேட்டாபேஸ் மெயின்டைன் பண்ணும் திலகா ஆச்சியை விசேசங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.
என்ன குட்டையம் பிள்ளை வளரவே மாட்டேன்கிற என்று கேலி பண்ணும் டவுண் வடக்குவீட்டு மீனாட்சி ஆச்சி, புட்டாரதியம்மன் கோயில் தெரு கடுகு ஆச்சி, பழனித் தெரு ஆச்சி, ராஜபாளையத்து ஆச்சி, பிரம்மதேச ஆச்சி,சங்கரன் பெரியப்பா வீட்டு ஆச்சி எல்லாரும் போய் சேர்ந்தாச்சு.
இந்த வாரம் மனைவியின் அம்மா ஆச்சி ஆம்பூரில் இறந்து விட்டார்கள். சிவாஞ்சலி பார்க்கும் முதல் மரணம் இது.காரில் போகும் பொழுதே ,நீ அம்பை ஆச்சி கிட்ட (என் அம்மா) சொல்லி நான் விளையாட குதிரை, செப்பு சாமான் எல்லாம் எடுத்து வைக்க சொல்லு என்றவள் ஆம்பூர் சென்றவுடன் ,பூட்டி ஆச்சியை ஏன்பா பெட்டில வச்சிருக்கு, ஏன் ஆச்சி பேசவே மாட்டேன்கிறாங்க என்று கேள்வி கேட்டு கொண்டே இருந்தாள். இருக்கும்பொழுதே நான் அம்பை ஆச்சி வீட்டுக்கு போகணும் என்னைய அங்க கொண்டு விடு என்று அனத்த ஆரம்பித்தாள். ஆம்பூர் ஆச்சியை இன்னைக்கு கூட்டிட்டு போயிடுவாங்க,அப்புறம் நாம ஆச்சியை பாக்கவே முடியாது ஆச்சியை எடுத்திட்டு போன பிறகு நாம அம்பை போகலாம் என்றதும், யாரு எடுத்திட்டு போவா, எடுத்திட்டு போய் என்ன பண்ணுவாங்க என்று தொடந்து கேள்வி கேட்டு கொண்டே இருந்தாள். அவளுக்கு புரியிறமாதிரி பதில் சொல்லி கொண்டு இருந்தேன், என்றுதான் நினைக்கிறேன்.
ஆச்சியை கடைசி காரியங்களுக்காக தூக்கி கொண்டு கிளம்பும் பொழுது, என்னருகில் நின்று கொண்டிருந்தவள் பக்கத்தில் இருந்த சேரில் ஏறி நின்று, பூட்டி ஆச்சி டாட்டா என்று கை அசைத்தாள் சிவாஞ்சலி.